மாநகர முதல்வர்கள் காவல்துறை அதிகாரங்களை பயன்படுத்து அரசாங்கம் அனுமதியளிக்காது  அமைச்சர் ஜோன்ஸ்டன்

இலங்கையில் எந்த   மாநகர முதல்வரும்  காவல்துறை அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் அதிகாரங்களை எந்த முதலவரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு கிழக்கில்  காவல்துறை மற்றும் நீதித்துறை எவ்வாறு செயற்பட்டது என்பது மக்களிற்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்நகர  முதல்வருக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட யாழ் மாநகர காவல் படை முதல் முறையாக  கடந்த 7ம் திகதி காலை தமது பணிகளை ஆரம்பித்திருந்திருந்தனர்.

இதையடுத்து யாழ் மாநகர காவல் படை குழு அணிந்திருந்த சீருடை  குறித்த புகைப்படங்கள் கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன.

மேலும் யாழ் மாநகர காவல் படை குழுவிற்கு வழங்கப்பட்ட சீருடை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல்துறை சீருடை போலவே இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கொழும்பு மாநகர சபை ஊழியர்களின் சீருடையை அவதானித்தே குறித்த சீருடை ஒழுங்கு படுத்தப்பட்டதாக தெரிவித்த போதும்,  விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ், மணிவண்ணன் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே எந்த   மாநகர முதல்வரும்  காவல்துறை அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.