சமஷ்டி அரசமைப்பின் மூலமாகவே நாட்டைப் பாதுகாக்க முடியும் – நிபுணர் குழுவிடம் விக்கி

77
111 Views

சமஷ்டி அல்லது கூட்டாட்சி முறைமையிலான அரசமைப்பு உருவாக்கப்பட்டதால்தான் இந்த நாடு பேரழிவிலிருந்து மீண்டெழுந்து அமைதி, சமாதானம், அபிவிருத்தி, நல்லிணக்கம் ஆகிய உயர் வழிகளில் மேலுயர முடியும் என புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழு முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தெரிவித்திருக்கின்றது.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத் தொகுதியில் உள்ள அரசியலமைப்பு நிபுணர் குழுவின் கலந்துரையாடல் மண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாகத் தனது கருத்துக்களை முன்வைத்தது.

“நாட்டின் இன்றைய பேரழிவுச் சூழலுக்கும் பின்னடைவு நிலைக்கும் ஒற்றையாட்சி அரசமைப்பு முறைமையே காரணம். பொருளாதார ரீதியிலும், பிற விடயங்களிலும் இலங்கை தோற்றுப் போன நாடாகத் துவண்டு கிடப்பதற்கு ஒற்றையாட்சி முறைமையே முழுக்காரணமாகும்” என்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சுட்டிக்காட்டியது.

அந்தக் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஷ் பிறேமச்சந்திரன், கலாநிதி க.சர்வேஸ்வரன், எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், செல்வேந்திரா ஆகியோர் பங்குபற்றினர். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-

“இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடு என்பதை இலங்கை அரசு ஏற்று, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. அந்த யதார்த்தத்தை ஏற்று அங்கீகரிக்கும் ஓர் அரசமைப்பு மூலமே நாட்டை மேம்படுத்த முடியும். தமிழ் மக்கள் மீது சிங்களவரின் பெரும்பான்மையின் மூலம் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசமைப்பு முறைமை பெரும் தோல்வி கண்டுவிட்டது. இன்று நாடு எதிர்கொண்டுள்ள பேரிழப்புக்களுக்கும், பின்னடைவுகளுக்கும் அவலங்களுக்கும் அதுவே – அது மட்டுமே காரணம். அதனால்தான் அதிலிருந்து வெளியே வருமாறு நாம் கோருகின்றோம்.

சமஷ்டியும் கூட்டாட்சியும் பிரிவினை அல்ல. ஒன்றுபட்டு, ஐக்கியமாக வாழ்வதற்குரிய உயரிய முறைமைகளே அவை. நாடாளுமன்றுக்குப் பதில் கூறக்கூடிய பிரதமரின் கீழ் நிறைவேற்று அதிகாரம் பிரயோகிக்கப்படும் ஒரு முறைமை என்றால் அதன் கீழ் சமஷ்டி முறைமை அரசமைப்பையும் – அப்படியில்லாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைத் தொடர்வதாக இருந்தால் கூட்டாட்சி முறைமை அரசமைப்பையும் ஏற்படுத்துவதே நாட்டின் மேன்மைக்கு ஒரே வழியாகும்.

உலக நாடுகள் பலவற்றிலும் பல்லின, பல்மொழி, பல் சமூக தேசங்களை ஒன்றிணைக்கும் உயரிய ஆட்சி முறையாக இந்த இரண்டுமே உள்ளன. சிறுபான்மை இனங்களையும் உள்வாங்கும் ஓர் அரசமைப்பை இலங்கை ஏற்படுத்த வேண்டும் என்றால் இந்த இரண்டில் ஒன்றுக்கு இணங்குவது தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here