யாழ். மாநகர காவல் படையினரிடம் பொலிஸ் விசாரணை – சீருடையை கையளிக்குமாறும் உத்தரவு

யாழ். மாநகரசபையினால் நேற்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட யாழ். மாநகர காவல் படையைச் சேர்ந்த ஐந்து பேரிடமும் யாழ். மாநகர சபை ஆணையாளரிடம் யாழ் பொலிஸ் நிலையப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த விசாரணை நேற்று நள்ளிரவு வரை மூன்று மணி நேரமாக நீடித்தது எனத் தெரியவந்தது. யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல் மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பது, தண்டப்பணத்தை அறவிடுவதற்காக குறித்த மாநகர பாதுகாப்புப்படை உருவாக்கப்பட்டது.

குறித்த மாநகர பாதுகாப்புப் படை இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ள நிலையில் நேற்றுக் காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் பணியில் ஈடுபட்டது. யாழ். மாநகர சுகாதார பணிமனைகளில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் 5 பேரை, புதிய சீருடையொன்றை அறிமுகம் செய்து, மாநகர காவல் படையென்ற பெயரில் யாழ் மாநகரசபை உருவாக்கியது.

இந்த ஐவருமே நேற்று யாழ்.பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுடன் யாழ். மாநகர சபைஆணையாளர், பிரதம வருமான வரிப்பரிசோதகர் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

மாநகரக் காவல் படையின் சீருடையை உடனடியாக பொலிஸ் நிலையத்தில் கையளிக்குமாறு கூறப்பட்டதாகவும் தெரியவந்தது.