ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சூடான் இராணுவம் தாக்குதல் – 30 பேர் பலி

சூடானில் விரைவாக ஒரு ஜனநாயக ஆட்சி முறை கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரி தற்போதைய இராணுவ இடைக்கால ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தைக் கலைப்பதற்கு சூடான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

தலைநகர் காத்தோம் பகுதியில் ஆர்ப்பாட்டததில் ஈடுபட்டவர்களின் நிலைகள் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல் கடந்த ஏப்பிரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைவிட மோசமானது.

சூடானில் நீண்டகாலமாக ஆட்சியில் உள்ள ஓமார் அல் பசீரை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதே ஏப்பிரல் மாதமும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ருந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை ஆட்சியில் உள்ள இடைக்கால இராணுவ சபை மறுத்துள்ளது. வன்முறையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

இதனிடையே, சூடான் மீது ஐக்கிய நாடுகள் சபை தடைகளை கொண்டுவர வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஆட்சியில் உள்ள அதிகாரிகள் மீது தடைகள் கொண்டுவரப்பட வேண்டும் என அதன் கிழக்கு ஆபிரிக்காவுக்கான பிராந்தியப் பணிப்பாளர் சரா ஜக்சன் தெரிவித்துள்ளார்.

சூடானில் இடம்பெற்ற இந்த தாக்குதலை ஐ.நா செயலாளர் நாயகமும் கண்டித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.