இராயப்பு ஜோசப் ஆண்டகை: நம்பிக்கையற்று வாழ்க்கையின் விளிம்பில் நின்றவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் – பி.மாணிக்கவாசகம்

64
90 Views

முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நிரந்தர இளைப்பாற்றல் தமிழ்த்தரப்பினருக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயராக இருந்த போதிலும், பொது வெளியில் பல்லின மதங்களைச் சார்ந்த மக்களினதும் அபிமானத்தைப் பெற்றதோர் ஆன்மீகத் தலைவராக அவர் திகழ்ந்தார். அத்தகைய தலைவரைத் தமிழ் உலகம் இன்று இழந்து நிற்கின்றது.

அவர், கொடூரமான போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுக்கப்பட முடியாத நிரந்தர சாட்சி. இழப்புகளுக்கு உள்ளாகி ஏதிலிகளாகியவர்களின் இரட்சகர். எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்று வாழ்க்கையின் விளிம்பில் நின்றவர்களின் நம்பிக்கை நட்சத்திரம். இத்தகைய ஒரு தலைவரை தமிழ் உலகம் இதுவரையில் சந்தித்ததில்லை. இனிமேலும் சந்திக்கப் போவதில்லை என்றே கூற வேண்டும்.

தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை. காலமும், சூழலும் அவர்களை உருவாக்குகின்றன. அத்தகைய ஒரு படைப்பாக துன்பத்திலும், தீராத துயரங்களிலும் ஆழ்ந்திருந்த மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அவர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்.

இயல்பிலேயே துணிவும் தீரமும் மிக்க இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் மூர்க்கமான யுத்தச் சூழலில் உயிராபத்துக்களையும், அவமானங்களையும் துச்சமாக மதித்துச் செயற்பட்டிருந்தார். பாதிக்கப்பட்டவர்கள் மீது அன்பும் ஆதரவும் கொண்டு பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச் சென்று அவர்களை ஆறுதல்படுத்தினார். அவர்கள் அனாதைகளில்லை என்று தேற்றி, அந்தத் துயரங்களில் இருந்து மீள்வதற்கான மன வலிமை பெற உதவினார். ஆயர் என்ற தனது செயற்படு எல்லைக்கு உட்பட்ட வகையில் திக்கற்றிருந்த மக்களுக்கான உதவிகளையும், நிவாரணத்தையும் முடிந்தளவில் வழங்கினார்.

அவருடைய உதவிகள் உடனடித் தேவைகளை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள், மற்றும் மோசமான காயங்களுக்கு உள்ளாகி அவயவங்களை இழந்தவர்கள் என விளிம்பு நிலை மக்களின் ஈடேற்றத்திற்கான கட்டமைப்புக்களை அவர் உருவாக்கினார்.

அந்தக் கட்டமைப்புக்கள், சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களாக, இளைஞர் யுவதிகளின் தொழிற்பயிற்சி நிலையங்களாக அவயவங்களை இழந்து மாற்றுத்திறனில் தங்கியிருந்தவர்களுக்கான பராமரிப்பு மற்றும் வாழ்வியல் பயற்சி நிலையமாக (வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள வரோட் நிறுவனம்) பெண்களின் பராமரிப்பு மையங்களாக, நீண்டகால மருத்துவ சேவைகளைப் பெற நேர்ந்தவர்களுக்கான வாழ்விட மையமாக ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயர் கூறுவதற்காக இப்போதும் எஞ்சி இருக்கின்றன. அவருடைய அளப்பரிய மக்கள் சேவையின் ஆதாரமாக அவைகள் திகழ்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் எத்தனையோ பேர் மறுவாழ்வு பெற்று பேரிழப்புக்களில் இருந்து மீண்டு  தங்களுடைய வாழ்க்கையைக் கொண்டு நடத்துபவர்களாக மாறியிருக்கின்றார்கள். அந்த மக்களுக்கான அவரது சேவை மத ரீதியான நியதிகள், கட்டுப்பாடுகளைக் கடந்து மனித நேயம் என்ற பரப்பில் விரிந்து பரந்திருந்தது, அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் அவரைத் தங்களின் இரட்சகராகவே நோக்கினார்கள். கத்தோலிக்கத் திருச்சபையின் ஓர் ஆயராக அந்த மதத்தைச் சார்ந்தவராக அவரை அவர்கள் நோக்கவில்லை. ஆயருடைய சீருடையில் அவர் நடமாடிய போதிலும், அவரைத் தங்களின் உற்ற நண்பனாக, நெருங்கிய உறவினராவே பாதிக்கப்பட்டவர்கள் கருதினார்கள்.

“பாதிப்புக்கு உள்ளான இந்த மக்களின் தொகை மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. இந்த மக்களின் நிலை மிகவும் இரங்கத் தக்கதாக இருக்கின்றது. இவர்கள் தமது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் அங்கலாய்ப்போடும், நம்பிக்கையின்மையோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களது நிலைமை இதயத்தை நெகிழச் செய்வதாக உள்ளது. இவர்களின் தொகையைக் கணக்கெடுத்துக் கூறவோ அல்லது தரவுகளின் வடிவில் தரவோ நான் விரும்பவில்லை” என்று போரினால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஆயர் இராயப்பு ஜோசப் குறிப்பிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களைப் பாதிக்கப்பட்ட மனிதர்களாக, அவர்களுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை என ஒதுக்கிவிட முடியாது. ஒதுங்கிவிடவும் முடியாது. அவர்கள் அன்போடும் உரிமையோடும் நோக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

“இவர்கள் ஒவ்வொருவரும் எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் பாத்திரமாக இருக்கின்ற மனிதர்கள். அவர்களுடைய துன்பங்களை, அவர்களுடைய துயரங்களை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இதயத்தில்தான் தாங்கிக் கொண்டு நாம் நடக்கின்றோம். அவர்களுடைய இழப்புக்களின் தாக்கம் அவர்களது முகங்களிலும் இதயங்களிலும் ஆறாத வடுக்களாக நாம் பார்க்கின்றோம்.

 

உடல் அவயவங்களை இழந்தவர்கள் உறவுகளை இழந்தவர்கள், வீடுகளை இழந்தவர்கள், குடும்பங்களை இழந்தவர்கள் சகோதரர்களை இழந்தவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் என இந்தப் பட்டியல் முடிவின்றி தொடர்கின்றது”என்று கூறிய ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் வாத்தைகள் சத்தியத்தின் வார்த்தைகளாக மிளிர்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை அவர் எவ்வாறு நோக்கினார் எத்தகைய மன உணர்வுகளுக்கு அவர் ஆளாகி இருந்தார் என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுபவையாக அவைகள் அமைந்திருந்தன. இன்றும் அமைந்திருக்கின்றன.

போரில் நேரடியாக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. அரசியல் கைதிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் துன்பங்கள், மனத் துயரங்கள் என்பவற்றிலும் அவர் கவனம் செலுத்தி இருந்தார். அவருயை இழப்பு போரினால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களை மட்டுமல்ல. அனைத்துத் தமிழ் மக்களையும் வெகுவாகப் பாதித்திருக்கின்றன. அதேபோன்று பல்வேறு அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் மனிதநேயச் செயற்பாட்டாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் அவருடைய சேவையின் மகத்துவத்தையும், அவரது பெறுமானத்தையும் உணர்ந்து வருந்தியிருப்பதை அவர்கள் வெளியிட்டிருக்கின்ற இரங்கற் செய்திகள், அனுதாபச் செய்திகள் என்பவற்றின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.

போர்க்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்த அவரை அப்போதைய அரசும், புலனாய்வப் படையினரும் தீவிர பேரினவாதிகளும் தங்களுக்கு எதிரானவர் என்றும், விடுதலைப்புலிகளின் முக்கிய ஆதரளாளர் என்றும், அவர்ளுக்காகவே செயற்படுகின்றார் என்றும் கருதி இருந்தார்கள்.

அன்றைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச கடும்போக்குடையவராகவும் கடும் சொற்பிரயோகிப்பவராகவும், தமிழ் மக்களையும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களே என்ற பகைமைப் போக்கிலான நோக்கைக் கொண்டிருந்தவராகவுமே திகழ்ந்தார். அவரும் சந்தேகக் கண்ணோடு ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களை நோக்கியிருந்த தருணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நலன்ளுக்காக அச்சமின்றி மிகத் துணிவோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

அப்போதைய நிலைமையில் அரசாங்கம் அனைவரையும் இரண்டு விதக் கண்ணோட்டத்துடனேயே நோக்கியது. அரசாங்கத்துக்கு சார்பானவர்கள் – பயங்கரவாதிகளுடன் போரிடுகின்ற அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றிருப்பவர்கள் ஒரு சாரார். மறு சாரார் அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்திற்கு எதிரானவர்களாக, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் மற்றும் அவர்களுடைய நெருங்கிய ஆதரவாளர்கள் என்ற கண்ணோட்டத்தை அரசு கொண்டிருந்தது.

அந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செயற்பட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை பேரின தீவிரவாதிகள் அரசுக்கு எதிரானவர் மற்றும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று விமர்சித்திருந்தனர். தென்பகுதி ஊடகங்களும் அரசுக்கும் இராணுவத்துக்கும் விரோதமான போக்குடையவர் என்ற சர்ச்சைக்கு அவரை உட்படுத்தி இருந்தன.

அத்தகைய ஒரு சூழலில் அரசின் முக்கியஸ்தர்களையோ அல்லது அரச தலைவர்களையோ நேரடியாகவோ வேறு தரப்பினர் ஊடாகவோ சந்திப்பது என்பது ஆபத்தான காரியம். அத்தகைய ஒரு நிலைமையில்தான் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்திருந்தார். அதேபோன்று யுத்த மோதல் சூழலுக்குள் சிக்கியிருந்த மடுமாதா ஆலயப் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காகவும் அவர் பெரும் பாடுபட்டிருந்தார்.

இத்தகைய பின்புலத்திலேயே ஆயர் இராயப்பு ஜோசப்பின் மறைவையடுத்து, ‘போர்ச்சூழலில் மக்களின் துயரங்களைத் துடைப்பதற்காக அரும்பாடுபட்டவர்’ என்று அன்றைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமாகிய மகிந்த ராஜபக்ச புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் தனது இரங்கற் செய்தியில் ‘போர்ச்சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்து நின்ற மக்களின் துயரங்களைத் துடைக்கவும் ஏழை மக்களுக்கு உதவவும் அவர் அரும்பாடுபட்டார்’ என குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ‘மடு அன்னையின் தேவாலயத்தைப் பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்’ என்று பிரதமர் தனது இரங்கற் செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.

பல்வேறு தரப்பினரும் மக்கள் மீது இராயப்பு ஜோசப் ஆண்டகை கொண்டிருந்த அன்பையும், அக்கறையையும், அர்ப்பணிப்புடனான சேவையையும் நினைவுகூர்ந்து பாராட்டி அவரது மறைவுக்காகத் தமது அனுதாபங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

ஆயர் அவர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் நலன்களுக்காகவும், அவர்களுடைய விடுதலைக்காகவும் அர்ப்பணிப்புடனான அக்கறையைக் கொண்டிருந்தார். அவர்களுக்காக அவர் அரச உயர் மட்டத்தில் குரல் கொடுத்து பாடுபட்டிருந்தார். இதனை தமிழ் அரசியல் கைதிகள் நன்றியுடன் நினைவுகூர்ந்து ‘சிறை அறைகளுக்குள் இருந்தபடி சிரம் தாழ்த்தி’ அஞ்சலித்திருக்கின்றனர்.

‘ஒடுக்கப்பட்டவர்களினதும் திக்கற்றவர்களினதும் உண்மை குரலாகத் தேசம் தாண்டி ஒலித்த ஒரு தமிழ்ப்பற்றாளர்’ என்றும்,

‘வேடமணிந்து கோஷமிட்டு, முதன்மை இருக்கைகளைத் தம்வசப்படுத்தி மாலை மரியாதைகளுடன் வலம் வருகின்ற வெற்றுச் சமூகப் பற்றாளர்களைப் போலன்றி, சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள ஆழமான தொடர்பை வெளிப்படுத்தி, நீதி நேர்மைக்காகத் துணிவோடு போராடிய அறப்போராளி’ என்றும்

‘சிறைக்கொட்டடிகளில் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் அத்தியாவசிய விடயங்களில் அழையா விருந்தாளியாக தன்முனைப்பு கொண்டு பல நற்காரியங்களைச் செய்தவர்’ என்றும் தமிழ் அரசியல் கைதிகள் கூறியிருக்கின்றனர்.

அத்துடன், ‘மனித நேயமும் பிறர் அன்பும் மிகுந்த பெருந்தகையான இவர், தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறைச்சாலைகளினதும் வாசல்களைத் தரிசித்து கைதிகளின் மனங்களில் தன்னம்பிக்கையை ஊட்டி, ஓர் அன்னையைப் போல ஆற்றுப்படுத்தி, ஆசிர்வதித்தவர்’ என நன்றியறிதலுடன் நினைவுகூர்ந்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் ‘பரந்து விரிந்த செயல் எல்லையைக் கொண்டிருந்த அதி வணக்கத்திற்குரிய ஆயர் அவர்களின் அர்ப்பணிப்புகளை இட்டு நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளமையானது, பெரும் வருத்தத்திற்குரியது’ என தமது இரங்கற் செய்தியில் வருந்தி இருக்கின்றார்கள்.

முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்துத் தமது துறவற வாழ்க்கையை ஆன்மீக நெறிபிறழாமல் அர்ப்பணித்துச் செயற்பட்டிருந்ததன் மூலம், தமிழ்த் தேசியப் பரப்பைக் கடந்து, சிறீலங்காவின் தேசிய அளவில் ஒரு முன்மாதிரியான ஆன்மீக வழிசார்ந்த தேச மக்களுக்கான தொண்டனாக வாழ்ந்து காட்டி மறைந்துள்ளார்.

அதுமட்டுமன்றி, இடையறாத துன்பங்களிலும், இக்கட்டான வாழ்க்கை நிலைமைகளிலும், பல்வேறு மதங்களையும் சார்ந்த மக்களுக்காக  ஆன்மீகத்தின் ஊடாகப் பாடுபட முடியும் என்பதற்கான மனத வாழ்வின் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றார் என்றால் அது மிகையில்லை.

தென்னிலங்கையின் மதத் தலைவர்களும் ஆன்மீக வழியில் பல காரியங்களைச் செய்து வருகின்றார்கள். ஆனாலும் சிங்கள தேசியத்தை முதன்மைப்படுத்தியுள்ள அவர்கள் அடிப்படைவாதிகளாக சிங்களப் பேரினத்தவர்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் இனவாத வெறியர்களாகச் செயற்படுவதையே தமது வாழ்வியல் நெறியாகக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் அர்ப்பணிப்பும், நேர்மையும் மனித நேயமும் கொண்ட வாழ்வியலை ஒரு படிப்பினையாகக் கொண்டு உண்மையான ஆன்மீகவாதிகளாக – ஆன்மீகத் தலைவர்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செயற்பட முன்வர வேண்டும்.

நாடு இன்று மோசமான நிலைமையில் சிக்கிக் கொண்டிருக்கின்றது. சிறுபான்மை மத, இன மக்கள் மோசமான நெருக்குவாரங்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள். அது மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவரும் மோசமான பொருனாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றார்கள். எனவே அனைத்து மக்களின் மீட்சிக்காகவும், நல்வாழ்வுக்காகவும், தங்கள் தங்கள் மதங்களின் உண்மையான நற்போதனை நெறிகளைக் கடைப்பிடித்து, மதக்கட்டுப்பாடுகளைக் கடந்து, அர்ப்பணிப்புடன் கூடிய மனித நேயத்துடன் செயற்பட வேண்டும்.

அதுவே, உண்மையான மக்கள் சேவையின் ஊடாக அர்ப்பணிப்புமிக்க ஆன்மீகத் தலைவராக முழுநாட்டுக்கும் பெருமையைத் தேடித்தந்துள்ள ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

சம்பந்தப்பட்ட ஆன்மீகத் தலைவர்களும், மதத்தலைவர்களும் செய்வார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here