தமிழ் தேசியத்தின் சிறந்த ஒரு வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம்! – வடக்கு கிழக்கு தமிழ் தேசிய சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கை!

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் 01/04/2021 இல் இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயர் அவர்களின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிடமுடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ் தேசியம் ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது.

மேதகு ஆயர் இராயப்பு ஜோசப்

16.04.1940 இல் தீவகத்தில் பிறந்த இவர் தனது 27 வயதில் தன்னை ஆன்மீகத்திற்கு அர்ப்பணித்த காலம் தொட்டு சமயப்பணியோடு சமூகப்பணியையும் காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ்த்தேசிய பணியையும் ஒருங்கே சம நோக்கோடு முன்னெடுத்து செயற்பட்டவர். 1992ஆம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் ஓய்வு நிலைக்கு வரும் வரையான காலங்களில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வன்னி எங்கும் பரந்துபட்ட பல்வேறு சமூக சிந்தனைகளோடும் கல்வி, கலை, மறுவாழ்வு, சமூக சீர்திருத்தம் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளையும் தனது மூச்சாக கொண்டு தனது ஆயர் பணிக்கு மேலான பணிப்பொறுப்புகளாக அவற்றை ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் சமூகங்களுக்கு அரும்பணி ஆற்றியவர் என்பதுடன் குறிப்பாக 2009 இற்கு பின் திக்கற்று இருந்த தமிழ் சமூகத்தின் மீட்புக்காக எல்லைகளை கடந்து செயற்பட்டு வந்த மிகச்சிறந்த மனிதர்.

மனிதநேயத்தோடு மட்டுமல்லாது பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நேர்நின்று ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலைக்காக பல்வேறு பரிமாணங்களில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி சொற்களோடு மட்டுமல்லாது அவைளுக்கு செயல் வடிவம் கொடுத்து செயற்பட்டு வாழ்ந்து காட்டிய மகத்தான தமிழ் தேசிய இனத்தின் கலங்கரை விளக்காக இறுதிக்காலம் வரை செயற்பட்ட ஒரு கர்ம வீரர்.

தமிழ் சமூகம் காலத்துக்கு காலம் சவால்களை சந்தித்த போதெல்லாம் அவற்றை கடந்து செல்வதற்கான சவால்களை ஏற்று அந்த இடங்களெல்லாம் எமது இனத்தை கடந்துசெல்ல நல்வழி காட்டியவரும் அறவழி அன்பும் கருணையும் இரக்கமும் தேசப்பற்றும் இவரிடம் அளவில்லாத ஆளுமைகள் வளர்வதற்கு காரணமாக இருந்தன. உண்மையான விடயங்களை எதுவித தயக்கமும் இன்றி வெளி உலகிற்கு எடுத்துச் சொன்ன போதெல்லாம் பலவிதமான இடர்களை சந்தித்தவர்.

இதனால் இனவாதிகளினால் எதிரியாகவும், பயங்கவாதியாகவும் கூட இவர் சித்தரிக்கப்பட்டார். ஸ்ரீலங்கா அரசு இன்னும் பல சர்வதேச நாடுகளும் இணைந்து தமிழினத்தின் மீதான இறுதி போரை கண்மூடித்தனமாக முன்னெடுத்து மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தின. பின்னர் அதனால் ஏற்பட்ட இழப்புகளையும் மனித உரிமை மீறல்களையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிக காத்திரமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் வெளிப்படுத்திய ஆன்மீகவாதி.

2009 ம் ஆண்டு யுத்தம் மெளனிக்கபட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர். தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர்.

வன்னிப் போர்ப்பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கையை இந்திய அரசும் ஸ்ரீலங்கா அரசும் குறைத்துக்கூறி மக்களை பட்டினிச்சாவுக்கும் இனவழிப்புக்கும் உள்ளாக்கியதை ஸ்ரீலங்கா அரசின் முல்லைத்தீவின் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் அறிக்கையை வைத்து உலகிற்கு அம்பலப்படுத்தி 146,469 தமிழர்கள் 2009 யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட போது கணக்கில் இல்லாது போனதை (Unaccounted) ஐ.நா முதல் அகிலம் வரை அறியச்செய்தார். பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதிக்குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.

ஆயர் அவர்கள் 1994ம் ஆண்டு தனது ஜேர்மனிய வருகையின்போது புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்தார். அன்றைய காலகட்டத்தில் அவரே அரசு-புலிகள் பேச்சுவார்த்தைக்கு மூலகாரணமாயிருந்தார். அன்றுதொட்டு அவர் அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஜோன் ஹெரியை சந்திக்க செல்லுமட்டும் தன் ஆன்மீகக்கடமைகளோடு தன் தமிழினக்கடமைகளையும் உறுதியோடும் நேர்மையோடும் அதீத அக்கறையோடும் செய்து வந்தார். ஜோன் ஹெரியை சந்திக்க செல்லும் வழியில் உடல்நலம் குன்றினார். இது சதியா.. விதியா.. இறை வழியா நாமறியோம்.

யுத்தகாலத்திலும் யுத்தமெளனிப்புக்காலத்திலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவச்சிறார்களுக்காக புலம்பெயர்நாடுகளில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாணவரை பொறுப்பெடுக்கவைத்து அவர்களின் கல்விக்கு உதவினார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல புதிய கிராமங்களை.. வீட்டுத்திட்டங்களை அமைத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றினார். தன் வாழ்வின் இறுதிவரை மறை மாண்புடனும் இறை வழிகாட்டலுடனும் வாழ்ந்து உலகமெல்லாம் வாழும் தமிழ் நெஞ்சமெல்லாம் ஆழப்பதிந்த ஆயர் இவர். சமயச்சடங்கோடு தன் ஆயத்துவத்தை முடக்கிக்கொள்ளாத ஆயர் இவர். மக்கள் மனங்களில் பெயர் பொறித்த நல் ஆயர் இவர். மறைந்த யாழ் ஆயர் மேதகு தீயோகுப்பிள்ளை வழியில் உண்மைக்காய்.. நீதிக்காய்.. இனத்திற்காய் குரல் கொடுத்துழைத்த அவரையும் மீறிய ஆயர் இவர்..

நானே நல்ல ஆயன் நான் என் மந்தைகளை அறிவேன் என் மந்தைகளும் என்னை அறியும் நல்ல ஆயன் தன் மந்தைகளுக்காக உயிரையும் கொடுப்பான் என்ற தலைமை ஆயன் இயேசுவின் வழியில் அவரின் பாஸ்கா பந்தியமர்வு நாளில் புனித வியாழன் அ‌ன்று அவரிமே சென்றடைந்த ஆயர் இவர். மக்களால் மறக்கப்படமுடியாத அன்பின் ஆயர் இவர்..

அவர் ஒடுக்கப்பட்ட இனத்தின் காவலனாக விளங்கியது மட்டுமல்லாமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான எமது போராட்டத்தின் தொடக்கமுமாக அவரே இருந்தார். மீளக் குடியமர்ந்த பின்பு பலரும் காணாமல் போன தமது உறவுகளை தேடி அலைந்து திரிந்த போது அவர்களுக்கு ஆறுதலாகவும் வழிநடத்துபவராகவும் இருந்து அவர்களை பாதுகாத்தவர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் உருவாகுவதற்கு மூல காரணமாக விளங்கியவர். இதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சனையை சர்வதேசத்திற்கு வெளிக் கொண்டு வருவதில் மிகப்பெரும் பங்காற்றியவர்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் ஆயர் அவர்கள் மிகக்காத்திரமான பங்காற்றியுள்ளார். சகல சிறைச்சாலைகளுக்கும் நேரடியாகவே சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் ஊட்டியவர். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக சகல தரப்பினரோடும் தொடர்புகளை ஏற்படுத்தி பல வழிகளிலும் கடும் முயற்சிகளை மேற்கொண்டவர்.

வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு எமது இறுதி வணக்கத்தை தெரிவித்து கொள்வதுடன் ஆயர் அவர்களின் இழப்பால் துயறுற்றிருக்கும் அனைவருடனும் துயர் பகிர்ந்து கொள்கின்றோம். ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக திங்கட்கிழமை (05/04/2021) தமிழ் தேசிய துக்க தினமாக ஏற்கனவே பிரகடனபடுத்தப்படுத்தியிருந்தோம். இதற்கு தமிழ் தேசிய கட்சிகள், பொது மக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன், அனைவரும் தங்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டும், தங்கள் உடைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர்தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்

வட-கிழக்கு சிவில் சமூக சம்மேளனம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு

பல்சமயங்களின் ஒன்றியம், மட்டக்களப்பு

சிவகுரு ஆதீனம், யாழ்ப்பாணம்

முதியோர் சம்மேளனம், மட்டக்களப்பு

வெண்மயில் அமைப்பு, மட்டக்களப்பு

அமெரிக்கன் மிஷன், மட்டக்களப்பு

சடோ லங்கா நிறுவனம், மட்டக்களப்பு

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம், வன்னி

அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம்

தமிழர் நலன் காப்பகம், மட்டக்களப்பு

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, மட்டக்களப்பு

புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு, திருகோணமலை

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, யாழ்ப்பாணம்

உலக தமிழர் மாணவர் ஒன்றியம்

இராவண சேனை, திருகோணமலை

கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்

தாய்நிலம் அறக்கட்டளை, சாவகச்சேரி

முல்லை மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையம்

YMCA மட்டக்களப்பு

வாலை அம்மன் சனசமூக நிலையம் – திருநெல்வேலி கிழக்கு

வடக்கு விளையாட்டு கழகம்

மகளிர் அபிவிருத்தி நிலையம்

வடக்கு கிழக்கு பொது அமைப்புகள், மற்றும் சம்மேளனங்கள்.