சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் – 10 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் நேற்று (02) மேற்கொண்ட தாக்குதலில் சிரியா இராணுவம் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சனிக்கிழமை இரவு சிரியாவின் ஹெமோன் மலைப்பகுதியில் இருந்து இரண்டு உந்துகணைகள் ஏவப்பட்டதாகவும், அதில் ஒன்று இஸ்ரேலின் கட்டுப்பாட்டுப்பகுதியில் வீழ்ந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 3 சிரிய இராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டுப்படையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக சிரியாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் இற்கு அண்மையாக ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா படையினர் தங்கியிருந்த இடத்தின் மீதே ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்றதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட போர் அவதானிப்புக்குழு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக சிரியப் படையினர் ஏவுகணை எதிர்ப்புத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இதுவரையில் சிரியா மீது இஸ்ரேல் 100 இற்கு மேற்பட்ட வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், சிரியாவுக்கு ஈரான் படையினர் ஆதரவளிப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த 8 வருடங்களாக நடைபெறும் போரில் 370,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.