தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு

இந்திய மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், அனுமதிக்கப்பட்ட பாதைகள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து ஏனைய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கவும் தமிழக் அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவலைத் தடுக்க, 2020ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி முதல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறையவடைந்ததைத் தொடர்ந்து, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

தற்போது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால்  நடைமுறையில் உள்ள ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 2,342 பேருக்கு தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அதே நேரம் 16 பேர் கொரோனா தொற்றுக்கு நேற்று உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், இந்திய தலைநகர் டெல்லியில், தீவிரமடைந்து வரும் கொரோனா நோய்த்தொற்றால், கடந்த ஆறு நாட்களில் மட்டும் 1,506 பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இது வரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,21,49,335ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,62,468  பேர் உயிரிழந்துள்ளனர்.