“நான் மீண்டும் வரவிருக்கும் அழிவைக் குறித்து பேசப் போகிறேன்” ராஷெல்லி வலென்ஸ்கி

“நான் மீண்டும் வரவிருக்கும் அழிவைக் குறித்து பேசப் போகிறேன்”  என அமெரிக்க அரசை எச்சரித்துள்ளார் அந்நாட்டு பொது சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரி ராஷெல்லி வலென்ஸ்கி.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.87 கோடியைக் கடந்துள்ளது. மேலும், இந்த  வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28.14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வரும் காலத்தில் அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து குறித்து அந்நாட்டு அரசை எச்சரித்துள்ளார்   ராஷெல்லி வலென்ஸ்கி.

மேலும் “கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாம் நம்பிக்கையோடு இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நான் இப்போது பயத்தில் இருக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மாகாணங்களில் அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மாகாண அரசியல் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு “நாம் இப்போது விதிகளைத் தளர்த்திவிட்டால், கொரோனா வைரஸ் இன்னும் மோசமாவதைப் பார்க்கலாம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60,000-ஐத் தொட்டது. இது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகள் படி 7 சதவீதம் உயர்வு.

இது வரையில் அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 31,097,154 ஆகவும் 564,138 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.