இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கின்றது – ஐ.நா

ஐ.நா மனித உரிமை சபையில், இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், ஊடகவியலாளர்கள் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள், சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து  ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மைக்கெல் பேச்லெட் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா சபையின் மனித உரிமை அவையில் பேசிய பச்லெட், ஸ்பெயின் முதல் சூடான் வரையிலான 50 நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பாக தனது கவலையை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்கள் “சட்டங்கள் மற்றும் கொள்கைகள் சம்மந்தப்பட்டவர்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன” என்றும் “விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் உரையாடல் அனைவரின் உரிமைகளையும் மதிக்கும் இந்த நெருக்கடிக்கு ஒரு சமமான தீர்வுக்கு வழிவகுக்கும்” என நம்புகின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் போராட்டங்கள் குறித்த கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை தடுக்கும் முயற்சிகளும் அடிப்படை மனித உரிமை மீறல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நேரம் காஷ்மீரில் சிவில் சமூக ஆர்வலர்கள் மீதான தடை மற்றும் தகவல்தொடர்புகள் குறித்த கட்டுபாடுகள் கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இந்த குற்றச்சாட்டுக்களை இந்திய அரசு மறுத்துள்ளது.