சிறீலங்கா எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாக நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.நா

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை சிறீலங்கா எதிர்த்தாலும்  அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் (Nada Al-nashif ) இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை, சிறீலங்கா அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீராக்கப்பட்டு நேற்று முன்வைக்கப்பட்டது.

சிறீலங்கா அரசாங்கம் சில விடயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், இந்த அறிக்கையை இறுதிப்படுத்த மூன்று வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பொறிமுறைகளின் பல விடயங்களை அமுலாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சிரியா, மியான்மார் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்டுள்ளதைப் போன்றோ அல்லது சிறீலங்கா விடயத்தை பிரத்தியேகமான முறையிலோ கையாள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடயத்துக்கான பொருத்தமான நடைமுறை எதுவென்பதை மனித உரிமைகள் பேரவையே தீர்மானிக்கும்.

அத்துடன், சிறீலங்கா விடயத்தில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.