மைத்திரிபாலாவுக்கு எதிராக எந்தவொரு வழக்கையும் தாக்கல் செய்ய முடியாது – சுதந்திரக் கட்சி

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை புறக்கணித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை கண்டறிதல், அந்த சக்திகளின் இலக்கை கண்டறிதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்கழு நியமிக்கப்பட்டதாகவும் அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“தற்கொலை தாக்குதல்தாரியான மொஹம்மது ஹஸ்துனின் மனைவியான சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றமை தொடர்பில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கவனத்திற்கொள்ளப்படவில்லை.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர், நாமல் குமார என்பவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்வதற்கான சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிக்கொணர்ந்தமை, அது தொடர்பில் வெளிநாட்டினர் ஒருவர் கைது செய்யப்பட்டு முக்கியஸ்தர் ஒருவரின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டமையை ஆகியவற்றையும் ஆணைக்குழு கவனத்திற்கொள்ளவில்லை.
அத்துடன், ஜனாதிபதி ஒருவர் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தவறுகின்றமை, எந்த வகையிலும் குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு காரணமாக அமையாது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, தமக்குரிய பொறுப்பினை ஆற்றியுள்ளமை ஆணைக்குழுவின் அறிக்கையினூடாக புலப்படுகின்றது. ஆகவே, அவருக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் வழக்கினையும் தாக்கல் செய்ய, சட்ட ரீதியாகவோ தர்க்க ரீதியாகவோ இடமில்லை. ஆணைக்குழு தமக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பை மீறி விடயங்களை குறிப்பிட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த ஆணைக்குழு தளர்வான கொள்கையையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு கடுமையானதுமான இரட்டைக் கொள்கையை இந்த ஆணைக்குழு பின்பற்றியுள்ளது. அதேபோல் கப்பலின் ஊடாக ஆயதங்கள் நாட்டிற்குள் கொண்டவரப்பட்டதான தகவல்களும் இந்த ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை.”