உடும்பன்குள படுகொலை நினைவு

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொகுதியில் உள்ள தங்கவேலாயுதபுரத்தை அண்டிய கிராமம் தான் உடும்பன்குளம். இது திருக்கோவில் பகுதியிலிருந்து 20 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள விவசாய கிராமம்.

உடும்பன்குள படுகொலை நடைபெற்று மூன்று தசாப்தங்கள் கடந்து விட்ட போதிலும் அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இழப்பிலிருந்து மீள முடியாதவர்களாகவே அவர்கள் உள்ளனர்

19-02-1986 அன்று காலை இச்சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. இச் சம்பவத்தில் 132 அப்பாவித் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனர்.

இப்படுகொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வண.பிதா சந்திரா பெர்னாண்டோ தலைமையிலான பிரஜைகள் குழுவினர் மனித உரிமை அமைப்பு ஒன்றின் உதவியுடன் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை புரிந்தனர்.

இத்தகைய இடர்கால பேருதவிகளை புரிந்த வணபிதா. சந்திரா பெர்ணாண்டோ அவர்களை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுப் படுகொலை செய்தது சிறீலங்கா படை.

1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரிவின்  அமர்வில் இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய டி.எஸ்.டிலோன் உடும்பன்குளம் படுகொலை சம்பவம் தொடர்பாக ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இக்கூட்டத்தொடரில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற குழுவின் தலைவர் செனட்டர் ஏ.எல்.ஹிஸ்ஸன் அவர்களும் இப்படுகொலை தொடர்பாக ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

 பிரித்தானியாவை தலைமையகமாக கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் 1986ஆம் ஆண்டு ஆண்டறிக்கையிலும் உடும்பன்குளம் படுகொலை பற்றி விபரிக்கப்பட்டிருக்கிறது. இந்த படுகொலையை யார் செய்தார்கள் என்ற விபரங்களை சர்வதேச மன்னிப்புச்சபை தனது ஆண்டறிக்கையில் தெரிவித்திருந்தது.

எனினும் இப் படுகொலைக்கான நீதி இன்று வரை பாதிக்கப் பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அவர்களின் உறவுகளால் ஒவ்வொரு வருடமும் உடும்பன் மலையடிவார முருகன் கோவிலில் தீபமேற்றி வழிபாடு மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.