அவுஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்: தமிழ் அகதி வேண்டுகோள்

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியுலகத்தைக் காணுவதற்கான சுதந்திரம் கிடைத்திருக்கிறது. 

“இந்த சுதந்திரம் அற்புதமாக உள்ளது. ஆனால் எனது வாழ்க்கையின் எட்டு ஆண்டுக் காலத்தை நான் இழந்திருக்கிறேன்,” என செல்வராசா கூறியுள்ளார்.

அதே சமயம், சுமார் 100க்கும் மேற்பட்ட அகதிகள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளனர். தனுஷ் செல்வராசாவைப் பொறுத்தமட்டில், மனுஸ்தீவில் செயல்படும் அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் சுமார் 6 ஆண்டுகளை அவர் கழித்திருக்கிறார். பின்னர், மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்புக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்ன் ஹோட்டலில் சுமார் ஒன்றரை ஆண்டுக்காலம் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

“நான் விடுதலையாகி விட்டேன் என எனது தாயிடம் சொல்லியதும் அவர் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்,” என்கிறார் செல்வராசா. தற்போது 31 வயதாகும் செல்வராசாவுக்கு 6 மாதக் கால தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வேலையையும் தங்குவதற்கான இடத்தையும் அவர் தேடி வருகிறார். இது ஒருபுறமிருக்க அவரது நினைவுகள் இன்னும் விடுவிக்கப்படாமல் தடுப்பில் உள்ளவர்கள் குறித்து கவலைக் கொண்டுள்ளது.  “அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்,” என்பதே செல்வராசாவின் எண்ணமாக இருக்கிறது.

அகதிகள் நல வழக்கறிஞர்கள் சொல்லும் கணக்குப்படி, மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகளில் 124 பேர் இன்னும் அவுஸ்திரேலிய தடுப்பில் உள்ளனர். “பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்ட நிலையில் நாங்கள் மட்டும் தடுப்பில் இருப்பது எங்களை பெருங்கவலைக் கொள்ள செய்கிறது,” எனத் தெரிவித்துள்ளார் இஸ்மாயில் ஹூசைன் எனும் அகதி.