தனி ஈழ இலக்கு சர்வதேச அளவில் வியாபித்துள்ளது – அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர  

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் தனி ஈழ இலக்கு சர்வதேச அளவில் வியாபித்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர  தெரிவித்துள்ளார்.

தனி ஈழ கொள்கையினையுடைய அரசியல்வாதிகள் இன்றும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள் என்றும் இதன் காரணமாகவே தேசிய பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டன.

இவ்வாறான செயற்பாட்டை அடிப்படைவாதிகள் சாதகமாக பயன்படுத்தி ஏப்ரல் 21 தினத்தில் குண்டுத்தாக்குதலை முன்னெடுத்தனர். இச்சம்பவம் குறித்த விசாரணை நடவடிக்கை தற்போது பகுதியளவில் நிறைவுப் பெற்றுள்ளது.

யுத்த காலத்தில் தேசிய பாதுகாப்பு எந்தளவிற்கு வினைத்திறனாக செயற்பட்டதோ அந்தளவிற்கு தற்போது புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு புலனாய்வு பிரிவின் பங்களிப்பு பிரதானமானதாகும். வடக்கில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கண்ணி வெடி அகற்றல் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு சில பகுதிகளில் பெருமளவிலான ஆயுதங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை புலனாய்வு பிரிவினரது தகவல்களுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நாட்டில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் புலிகளின் தனி ஈழ இலக்கினை இன்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்து செல்கிறார்கள்.

இதற்கு அவர்கள் வாழும் நாடுகளில் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் இலக்கு சர்வதேச அளவில் வியாபித்துள்ளது.

தனி ஈழ கொள்கையினை கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றையாட்சி முறைமைக்கு முரணான கருத்துக்களை குறிப்பிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இதன் காரணமாகவே தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.அழிக்கப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பினை மீளுருவாக்குவதற்கு செயற்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்” என்றார்.