சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் – கூர்மையடையும் போராட்டங்கள்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளில் கூர்மையடைந்து வருகின்றன.

தமிழினவழிப்புக்கான பரிகார நீதியைக் கோருவதோடு, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற தமிழர்களின் தொடர்சியாக கோரி வருகின்றனர்.

குறிப்பாக சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையாளரது முக்கிய பரிந்துரை தமிழர்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்திருந்ததோடு, தாயகத்தில் இடம்பெற்றிருந்த பொத்துவிதல் முதல் பொலிகண்டி வரையிரலான மக்கள் எழுச்சிப் போராட்டமும் உரமூட்டியிருந்தது.

இந்நிலையில் புலம்பெயர் தேசங்களிலும் இக்கோரிக்கை வலிமைபெறும் வகையில் கவனயீர்ப்பு போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள் இடம்பெற்று வருகின்றன.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள நெதர்லாந்தின் கெக் நகரில் இருந்து ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை நோக்கிய நீதிக்கான ஈருருளிப் பயணம் தொடர்ந்து நகர்ந்து வருகின்றது. தலைநகர் பரிஸ், புறநகர சபை வளாகங்களில் இனவழிப்பினை வெளிப்படுத்தும் ஒளிப்பட காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை கனேடிய தலைநகர் ஒட்டாவா அரச மையம் நோக்கி நீதிக்கான வாகன பேரணியொன்றும் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் தீர்மான வரைவினை கொண்டு வருகின்ற முகன்மை நாடுகளை நோக்கிய அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து போராட்டங்களும் கனடா, ஜேர்மன் ஆகிய நாடுகளில் கூர்மைப்பெற்றுள்ளன. புதிய தீர்மான வரைவானது சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையினை பிரதானமாக இக்கையெழுத்து இயக்கங்கள் வலியுறுத்துகின்றன.