மாணவர் சமூகம், எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்று-கலையரசன்

மாணவர் சமூகம் என்பது எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது என தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

மேலும் “கிழக்கு மாகாணத்தில் எமது மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடயம் எதிர்காலத்தில் எமக்குப் பாரிய சவாலாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருக் கோவில் கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் கலைப்பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் டி.இராசநாதன் தலைமயில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்து கொண்டு  மேலும் தெரிவிக்கையில்,

“இப்பிரதேசத்திலே கடந்த காலங்களில் க.பொ.த சாதாரணதரத்துடன் பல மாணவர்கள் இடைவிலகலை மேற்கொள்வதாக தகவல்கள் எமக்குக் கிடைத்தன. அந்த வகையில் அதற்கெல்லாம் ஒரு முடிவு இன்று கிடைத்திருக்கின்றது. ஒரு பிரதேசத்தின் பாடசாலைகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதனை தலைமை தாங்கி வழிநடத்துபவர்களின் கைகளிலேயே இருக்கின்றது. அந்த வகையில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் மிகவும் சாதுரியமான, சமூகத்தில் அக்கறை கொண்ட அதிகாரியாகச் செயற்படுகின்றார். அதேபோன்றுதான் இப்பாடசாலையின் அதிபர் அவர்களும். இவர்கள் கிடைக்கப்பெற்றிருப்பதோடு இப்பிரதேச மாணவர்களின் கல்வி நிலை தன்நிறைவு அடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இவ்வாறான பிரதேசங்களில் பாடசாலைகள் தரமுயர்த்தப்படுகின்ற போது எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளர்களை நாம் இங்கிருந்து உருவாக்க முடியும். தற்காலத்திலே க.பொ.த உயர்தரத்திலே இவ்வாறான பின்தங்கிய பிரதேசத்தில் இருந்ததுதான் கூடுதலான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால் இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பிள்ளைகள், பெற்றோர்களுக்குத் தான் தெரியும் கஸ்டத்தின் மத்தியில் கல்வியின் தேவைப்பாடு.

அந்த வகையில் இந்தப் பிரதேசங்களின் பெற்றோர்களும் அதிக அக்கறையுடன செயற்படுவது போன்று இப்பிரதேசங்களுக்குக் கல்வி கற்பிக்க வருகின்ற ஆசிரியர்களும் மிகவும் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றார்கள். அந்தவகயில் இன்றை தினம் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இதற்கான வெளியீடுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வருகின்ற போதுதான் இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும்.

மாணவர் சமூகம் என்பது எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. எமது சமூகத்தைப் பொறுத்தவரையில், கல்வியும், விவசாயமும் வீழ்ச்சியடைந்து போவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தற்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் எமது மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடயம் எதிர்காலத்தில் எமக்குப் பாரிய சவாலாக அமையும். ஏனெனில் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற பொழுது அந்த மாணவர் தொகை பார்க்கப்படுகின்றது. அதன் காரணமாக எமக்குக் கிடைக்கப்படுகின்ற வளங்களும் குறையும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

எமது வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட யுத்தத்தினால் பொருளாதார ரீதியாக மாத்திரமல்ல, அரசியல் மற்றும் இன ரீதியான விகிதாரசாரத்திலும் மிகவும் பின்நோக்கிய ஒரு நிலையிலேயே எமது தமிழ் சமூகம் சென்றுள்ளது. இந்த நாட்டிலே வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே நாங்கள் எமது இருப்புக்காகப் போராடி இன்று எமது இனரீதியான விகிதாசாரம் மிகவும் குறைக்கப்பட்ட ஒரு நிலைமையில் நிற்கின்றோம். தற்போது இருக்கின்ற எமது பொருளாதாரம் ஒரு பிரச்சினையாக இருந்தாலும் எமது மக்கள் அந்த விடயத்திலே அக்கறையுடன் செயற்பட வேண்டும். எதிர்காலத்திலே நாங்கள் எமது பிரதேசங்களில் நிலையாக வாழ வேண்டும் என்றால் எமது அரசியல், கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி என்ற ரீதியில் நாங்கள் முன்நோக்கிப் போக வேண்டியவர்களாக இருக்கின்றொம். அத்துடன், கல்வி ரீதியில் உயர் பதவிகளில் இருப்பவர், அரசியலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது சமூக ரீதியான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் எமது நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளார்கள் என்ற காரணத்தினால் சமப்படுத்தல் என்ற விடயத்தைக் கொண்டு வந்தார்கள். 2015ம் ஆண்டுக்கு முன்னர் இந்த விடயத்தினால் மிகப் பாரிய அனர்த்தம் ஏற்படுத்தப்பட்டது. அதனை நாங்கள் அப்போது தட்டிக் கேட்டோம். அவ்வாறு தட்டிக் கேட்ட போது மாகாணசபையைக் கூட நடத்தாமல் இழுத்து மூடிய வரலாறுகளும் உண்டு. எனவே நாங்கள் எமது சமூகத்தின் விடயங்கள் தொடர்பில் மிகவும் நிதானமாக ஜனநாயக ரீதியில் போராட வேண்டிய நிலைப்பாடு காணப்படுகின்றது.

எனவே பெற்றோர்களே எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளை நல்ல கல்வியலாளர்களாக உருவாக்கி எமது பிரதேசங்களில் உங்கள் பிள்ளைகள் பணி செய்யக் கூடிய வகையிலே செயற்பட வேண்டும். நாங்கள் மாற்றுச் சமூகத்தைப் பற்றிக் கதைப்பதில் எவ்வித பயனும் இல்லை. நாம் தான் எமது மக்களை முன்னேற்றுவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிரிகளாகவே பார்க்கின்றார்கள். நாங்கள் எங்கள் மக்களின் ஜனநாயக உரிமையைக் கேட்கும் போது. அவர்கள் எங்களை வித்தியாசமான முறையிலே கையாளுகின்றார்கள். ஏனெனில் இந்த நாட்டிலே முன்னெடுக்கப்படுகின்ற ஒவ்வொரு விடயமும் எமக்குப் பாதகமானதாகவே முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நாட்டிலே யுத்தம் முடிந்த கையோடு நாங்கள் சமாதானத்தை விரும்பினோம். சமாதானத்தை ஏற்படுத்தும் எவ்வித செயற்பாடுகளையும் இந்த அரசாங்கம் கையாளவில்லை. எங்களை எதிரிகளாகவும், அடிமைகளாகவுமே கையாளுகின்ற நிலைமையே இருக்கின்றது. நாங்களும் முடிந்தவரை ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்ற அடிப்படையிலே செயற்படுகின்றோம்” என்றார்.