பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா  தன் நாட்டில்  தடை விதித்திருப்பதாக  அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் வீகர் இனவாத சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான பிபிசியின் ஊடக ஒளிபரப்பு குறித்தும் அந்நாடு விமர்சித்திருக்கிறது.

பிரிட்டனில் அதன் ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காம் (Ofcom), சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (சிஜிடிஎன்) என்ற சீன அரசு ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக, பிபிசி மீதான சீனாவின் உள்நாட்டு ஒளிபரப்பு தடை  செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவில் பிபிசி உலக சேவையின் இன்டர்நெட் மற்றும் அதன் செல்பேசி செயலி  முடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீன அரசின் இந்த முடிவு ஏமாற்றம் தருவதாக பிபிசி தெரிவித்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சீன அரசுத்துறையின் நடவடிக்கை தொடர்பான முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச அளவில் உலக செய்திகளை வெளிப்படையாகவும் பக்க சார்பற்றும் அச்சமன்றியும் வெளியிடுவதில் உலகின் நம்பகமான சர்வதேச ஊடக ஒளிபரப்பாளராக பிபிசி உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்”ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கை ஏற்க முடியாதது,” என பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் விமர்சித்துள்ளார்.