தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் – ராஜ்ய சபாவில் இந்திய வெளியுறவு அமைச்சர்

“ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவத்துக்கும் நீதிக்கும் சமாதானத்துக்குமான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை கௌரவமான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே, இலங்கையின் சொந்த நலனுக்கு உகந்தது” என இந்திய பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.

நேற்றைய தினம் இந்திய பாராளுமன்றின் மேலவையில் (ராஜ்ய சபா) கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கடந்த மாதம் கொழும்பில் உயர் மட்ட தலைவர்களுடன் உரையாடிய போது நல்லிணக்க செயல்முறைக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதாகக் கூறினார்.

மேலும், ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகிய தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமானால், அது, 13ஆவது திருத்தம் உள்பட அர்த்தமுள்ள ஓர் அதிகாரப் பரவலாக்கலுக்காக இலங்கை அரசு அளித்த உத்தரவாதத்தை செயல்படுத்துவதாக அமையும்.

1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசை இந்தியா வற்புறுத்தி வருகிறது. எனது அண்மைய விஜயத்தின்போது (ஜனவரி 5 – 7) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன ஆகியோருடனான சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையாடினேன். இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு இந்தியாவின் ஆதரவு நீண்ட காலமாக உள்ளது என்பதை நான் மீண்டும் அவர்களிடம் வலியுறுத்தினேன்.

தமிழர்களின் நலனைப் பாதுகாப்பது தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்ற அனைத்து மட்டங்களிலும் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார். காலதாமதமாகும் இந்த இன நல்லிணக்க நடவடிகைகள் இன சௌயன்யத்துக்கு மிகவும் அவசியம் என்பதை வற்புறுத்தினேன்.

இந்தியா தொடர்ந்தும் இதில் அக்கறை கொள்ளும் என்றும் தெரிவித்தேன். மேலும், கடந்த செப்ரெம்பரில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான காணொலி மூலமான பேச்சின்போதும் இந்திப் பிரச்னை தொடர்பில் பேசப்பட்டது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.