டெல்லியில் விவசாயிகள் போராட்டம் – 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை  எனத் தகவல்

டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை காணவில்லை   என தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக  இந்தியத் தலைநகர் டெல்லியில் இரு மாதங்களுக்கும் மேலாக போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகள், இது வரையில் 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மத்திய அரசுடன் நடத்தியுள்ளனர்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில்  எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை. அதே வேளை  இந்த சட்டங்களை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கடந்த 26-ம் திகதி   மாபெரும் டிராக்டர் பேரணி (உழவு இயந்திரம்) ஒன்றை நடத்தினர். இதில் வன்முறை ஏற்பட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை  தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த பேரணி மற்றும் வன்முறை சம்பவத்துக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள்  கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இதுகுறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ள விவசாயிகள், காணாமல் போனவர்களின் விபரங்களைச்  சேகரித்து வருகின்றனர். மேலும்     காவல்துறை  அதிகாரிகளிடம்  இந்த விபரங்கள் கொடுக்கப்படும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்து உள்ளது.