14 நாடுகளில் பரவியுள்ள புதிய கொரோனா வைரஸ்- அதிக மரணங்களை ஏற்படுத்துவதாக தகவல்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.25 கோடியைக் கடந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில்,   உருமாறுகிற புதிய கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் பரவி வருகின்றன.

சமீபத்தில் இங்கிலாந்தில் தோன்றிய உருமாறிய வைரஸ், சீனாவில் முதலில் உருவாகி உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ்களை விட வேகமாக பரவுகிற தன்மையை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், தற்போது உருமாறிய 3 கொரோனா வைரஸ்கள், 14 நாடுகளில் பரவியுள்ளதாகவும், அவற்றின் தொற்று மற்றும் தீவிர தன்மை அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்றும் ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சீனாவில் இருந்து வந்த  கொரோனா வைரசை விட இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா அதிக மரண ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு கூறுகிறது.

அதே நேரத்தில் அமெரிக்காவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள மாடர்னா மற்றும் பைசர் பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசிகள், இந்த இரு வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன என்று அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.