விவசாயிகள் மீது பொலிஸ் தடியடி- வைகோ கண்டனம்

டெல்லியில் விவசாயிகள்  நடத்தி வரும்  டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டமைக்கு வைகோ கண்டனம் தெரிவித்து்ளளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை முழமையாக இரத்து செய்யக் கோரி  டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று  முன்னதாகவே அறிவித்த படி இன்று குறித்த பேரணி நடத்தப்படுகின்றது.

இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தற்போது தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி போர்க்களமாக காட்சியளிக்கிறது. இதில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் பெரும்பாலான பிரதான சாலைகள் மறுஉத்தரவு வரும்வரை மூடப்பட்டுள்ளன.

மேலும், தீவிரமடைந்து வரும் போராட்டத்தை கருத்திற்கொண்டு டெல்லியின் முக்கிய பொதுப் போக்குவரத்தான மெட்ரோ இரயில் சேவையும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கிரே நிற வழித்தடம் முழுவதும் இரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லியில் பதற்றம் நிலவும் பல்வேறு இடங்களில் இன்று நள்ளிரவு வரை இணைய சேவையை முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுளளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில் ,

டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதுபொலிஸார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது. மக்கள் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து 3 சட்டங்களை இரத்து செய்ய வேண்டும். பிடிவாதம் பிடித்து விவசாயிகளை ஒடுக்கிவிடலாம் எனக் கருதினால் விபரீத முடிவே ஏற்படும் என தெரிவித்துள்ளார்.