அரச குடும்பத்தை விமர்சித்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனை

அரச குடும்பத்தை விமர்சனம் செய்த பெண்ணுக்கு 43 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து தாய்லாந்து உத்தரவிட்டுள்ளது.

 தாய்லாந்தில் இதுவரை விதிக்கப்பட்ட தண்டனைகளிலேயே மிகக் கடுமையான தண்டனை இது என்று கூறப்படுகிறது.

அஞ்சன் என்ற அந்த 63 வயது பெண் முன்னாள் குடிமைப் பணியாளர். அவர் சமூக ஊடகப் பக்கங்களில் போட்காஸ்ட் முறையில் ஆடியோ பதிவுகளை வெளியிட்டார்.

இந்நிலையில், தாம் வெறுமனே ஆடியோ கோப்புகளை மட்டுமே வெளியிட்டதாகவும், அவற்றின் உள்ளடக்கம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் ‘லெசே மெஜஸ்டி’ என்ற சட்டம் முடியரசுக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடை செய்கிறது. உலகில் உள்ள இத்தகைய சட்டங்களிலேயே இது கடுமையான ஒன்று.

மூன்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை கடந்த ஆண்டு கடைசியில் பயன்படுத்தத் தொடங்கியது தாய்லாந்து.

2014 – 2015 ஆகிய இரு ஆண்டுகளில் ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய தளங்களில் அஞ்சன் பகிர்ந்த ஆடியோ பதிவுகளில் 29 வெவ்வேறு பதிவுகள் இந்த சட்டத்தை மீறும் வகையில் இருந்ததாக அவர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட 87 ஆண்டு கால சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது.

2014ல் இராணுவ ஜன்டா அதிகாரத்தை எடுத்துக்கொண்ட பிறகு முடியரசு மீதான விமர்சனங்களை நசுக்க உறுதியேற்று 14 பேர் மீது லெசே மெஜெஸ்டி சட்டத்தை பயன்படுத்தியது. அவர்களில் அஞ்சனும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.