பாலஸ்தீனர்களுக்கு  தடுப்பு மருந்தை மறுக்கும் இஸ்ரேல்

புத்தாண்டின் முதல் நாளில், ஜெருசலேம் ஷாலோம் கல்லூரியில் மூத்த துணைத் தலைவரான டேனியல் கோர்டிசின் “தடுப்பு மருந்து அதிசயம் இஸ்ரேலை மீண்டும் அதன் வேர்களுக்கு கொண்டு வருகிறது.” என்ற தலைப்பிலான ஒரு கருத்துக் கட்டுரையை பளூம்பெர்க் வெளியிட்டது.

இஸ்ரேலின் தீவிர கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து திட்டம் அதனை உலகிலேயே தனிநபர் தடுப்பு மருந்து போடும் விகிதத்தில் முன்னணிக்கு உந்தி தள்ளியுள்ளது என்பதுதான் அந்த “அதிசயம்”

இந்நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் வாழும் 50 இலட்சம் பாலஸ்தீனர்களை தனது தடுப்பு மருந்து திட்டத்தில் இருந்து அரசு விலக்கியள்ளது.

4ம் ஜெனீவா மாநாட்டின் 56ஆவது பிரிவின் படி, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தையும் சுத்தத்தையும் பராமரிக்க, மருத்துவம், மருத்துவ நிறுவனங்களையும் சேவைகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டுகிறது.

அதிலும் குறிப்பாக, வருமுன் காப்பது, தொற்று நோய்களையும் தொற்று நோய் பரவலையும் தடுப்பது போன்ற தேவையான காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் பாலஸ்தீனிய மருத்துவ நிறுவனங்களுக்கும் சேவைகளுக்கும் எப்போதும் எதுவும் இஸ்ரேல் செய்ததில்லை என்பது மட்டுமல்ல,மருத்துவமனைகள், மருத்துவ ஊர்திகள்,மருத்துவ பணியாளர்கள் மீது குண்டுவீசித் தாக்குவதுடன், காசா பகுதியை கடந்த 13ஆண்டுகளாக முற்றுகையில் வைத்திருக்கிறது இஸ்ரேல்.

இது வரையில் பாலஸ்தீனப்பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 17,00 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம், அந்த சிறிய நிலப்பரப்பில் 47,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை 470 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

பெரும்பாலும் “ திறந்த வெளிச் சிறைச்சாலை” என்று வர்ணிக்கப்படும் காசா நிலப்பகுதி உலகில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் ஒன்றாகும். இஸ்ரேல் அரசு இந்த மக்களை நெருக்கமாக, சுகாதாரமற்ற நிலையில், வாழ கட்டாயப்படுத் திருப்பது, இந்தப் பகுதியை வைரஸ் எளிதில் பரவுவதற்கான தளமாக மாற்றி உள்ளது. டிசம்பர் மாதத்துவக்கத்தில், வைரஸ் கட்டுப்பாட்டை மீறிப் பரவிக் கொண்டிருந்த போது, காசா பகுதியில் ஆக்சிஜன், தீவிரச் சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், கொரோனா வைரஸ் பரிசோதனைகள் ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீனத்திற்கான கொரோனா தடுப்பு மருந்தை தடைசெய்துள்ளது இஸ்ரேல்.