ஜோ பைடன் இன்று பதவியேற்பு – “நான் சவாலான மோதல்களை எதிர்கொண்டேன்“- ட்ரம்ப் உரை

அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று  பதவியேற்க உள்ளார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதையடுத்து  அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் இன்று   பதவியேற்க உள்ளார்.  துணை அதிபராக கமலா ஹாரிஸ்  பதவி ஏற்கின்றார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியில் இருந்து வெளியேறும் முன்னர் விடைபெறும் வகையில் ஓர் உரை யூடியூபில் நிகழ்த்தியுள்ளார். அதில், “நாங்கள் என்ன செய்வதற்காக வந்தோமோ அதைச் செய்தோம். அதற்கு மேலும் செய்தோம். நான் சவாலான மோதல்களை எதிர்கொண்டேன். ஏனெனில், அதற்குத்தான் நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தீர்கள். அரசியல் வன்முறை என்பது அமெரிக்கர்களாகிய நாம் மதிக்கும் எல்லாவற்றிற்கும் எதிரான தாக்குதல். இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த உரையில் புதிய அதிபரின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.

இதே நேரம், ”ஜோ பைடன் நிர்வாகம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் சுலபமானதாக இருக்காது. இருப்பினும் மக்களின் ஒத்துழைப்பு, ஆதரவுடன், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்,” என, அமெரிக்க துணை அதிபராக பதவியேற்க உள்ள, இந்தியாவை பூர்வீகமாக உடைய, கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.