வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை – உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க குழு அமைக்கப்பட உள்ளது என்றும்   இந்த குழுவை யாராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்திய நிறைவேற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் கடந்த 49 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,தலைநகர்  டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரியும், வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கில், விசாரணைகளை மேற்கொண்ட உச்சநீதி மன்றம், மறு உத்தரவு வரும் வரை மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.  மேலும், பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல நான்கு நபர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.