கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தீ – விரக்தியில் முகாம்வாசிகள்

அவுஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு அப்பால் உள்ள கிறிஸ்துமஸ் தீவு குடிவரவுத் தடுப்பு முகாமில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பலர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் விரக்தியடைந்த முகாம்வாசிகள் இம்முகாமிற்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 

இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு காணொலியில் பேசியுள்ள ஒரு முகாம்வாசி, “எங்கள் குழந்தைகள் பார்க்க முடியவில்லை.  எங்கள் குடும்பத்தினரை பார்க்க முடியவில்லை.” இதில் சிலர் சுமார் 5 அல்லது 6 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முகாம்வாசி “இது அத்தனையும் போதும் போதும்” என்ற வகையில் தனது குரலைப் பதிவுச் செய்திருக்கிறார்.

அதே சமயம்,அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளவர்கள் அவுஸ்திரேலியர்கள் அல்லாத சட்டவிரோதமான குடியேறிகள் என அவுஸ்திரேலிய எல்லைப்படை குறிப்பிட்டிருக்கிறது.

குற்றச் செயலில் தண்டிக்கப்பட்டு விசா ரத்தானவர்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளதாக எல்லைப்படை குறிப்பிட்டுள்ள போதிலும் இத்தடுப்பு முகாமில் எத்தனை வெளிநாட்டினர் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அவுஸ்திரேலிய எல்லைப்படை தெரிவிக்கவில்லை.

கிறிஸ்துமஸ் தீவு முகாமில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தேசிய நீதி திட்டத்தின் தலைமை வழக்குரைஞர் ஜார்ஜ் நியூஹவுஸ், சுமார் 22 மணிநேரம் அறையிலேயே வைக்கப்பட்டிருப்பதாலும் மோசமான சிக்னல் காரணமாக குடும்பத்தினருடன் அலைப்பேசியில் பேசமுடியாமையினாலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் கடும் விர்கதியடைந்துள்ளனர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.