தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் படை மீண்டும் தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது. 

நேற்று காலை இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 3 அதிவிரைவு கப்பலில் வந்த இலங்கை கடற் படையினர் மீனவர்கள் மீதும் படகுகள் மீதும்  கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்தோடு  இரண்டு படகுகளையும், படகிலிருந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ளனர். மீன் பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

 இதனால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டு கரைதிரும்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும்  சில மீனவர்களின் நிலை குறித்து தகவல் இன்றி உறவினர்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய நிலையில், தமிழக மீனவர்கள் மீது நடந்தேறிய இந்த தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என அனைத்து மீனவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.