ஈழத் தமிழர் குறித்த இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்தை வரவேற்ற தமிழக ஆளுநர்

ஈழத் தமிழர் தொடர்பாக புதன்கிழமை கொழும்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறிய கருத்துக்களை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் வரவேற்றார்.

“நாங்கள் இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதால், இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா மிகுதியான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது” என்று புரோஹித்  ராஜ் பவன் வெளியீடு ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு இந்தியாவின் ஆதரவு நீண்ட காலமாக உள்ளது.  தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளான சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவை நிறைவேற்றப்படுவது தமிழ் மக்களுக்கும் இலங்கைக்கும் நன்மை பயக்கும். இது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உட்பட அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கம் செய்துள்ள கடமைகளுக்கு சமமாக பொருந்தும். இலங்கையின் முன்னேற்றமும் செழிப்பும் நிச்சயமாக இதன் விளைவாக முன்னேறும். இது ஒரு முக்கியமான அறிக்கை.  இது இலங்கையில் உள்ள தமிழ் சகோதர சகோதரிகள் மீது இந்திய அரசாங்கத்தின் அக்கறையை குறிக்கிறது.” என்று தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் தொடர்பாக நாட்டின் நிலைப்பாட்டை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியதை சுட்டிக்காட்டிய புரோஹித், “அவரது வார்த்தைகள் தமிழக மக்களால் வரவேற்கப்படுவது உறுதி” என்றார்.