புதிய கொரோனா – இந்தியாவில்   கட்டுப்பாடுகள் அறிவிப்பு

உலகின் பல நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளையும் பயணத் தடையையும் விதித்துள்ள நிலையில், புதிய வைரஸ் திரிபு தொடர்பான விவரங்கள், அதில் இருந்து தற்காத்துக்கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு பிறப்பித்துள்ளது.

மேலும் அரசுத்துறைகள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டுதல் நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில், “SARS- CoV 2 என்றழைக்கப்படும் புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட தகவலை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. இந்த வைரஸ் திரிபு ஐரோப்பிய நோய் கட்டுப்பாட்டு மையத்தால் மிகவும் வேகமாகப் பரவக்கூடியது, வயதில் இளையவர்கள் பாதிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

“17 வகை மாற்றங்கள் அல்லது திரிபுவுடன் தொடர்புடையதாக இந்த வைரஸ் விவரிக்கப்படுகிறது. அதில் மனிதர்களின் உடலில் உள்ள ACE2 என்ற உள்வாங்கி மரபணு கூறை மீறி ஸ்பைக் புரதத்துக்குள் ஊடுருவும் வகையில் N501Y என்ற திரிபு உள்ளது. ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் இந்த மாற்றம், மிக அதிக பாதிப்பையும் வேகமாக பரவும் தன்மையையும் கொண்டதாக உள்ளது,” என்று இந்திய அரசு புதிய வகை வைரஸ் திரிபு தொடர்பாக மாநில அரசுகளுக்கு விவரித்திருக்கிறது.

மேலும்  இந்த வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 23ஆம் திகதி வரை வந்த பயணிகளை அடையாளம் கண்டு அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

“இவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதை அவர்களுக்கு நடத்தப்படும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே உறுதிப்படுத்த வேண்டும். பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்படி அவர்கள் கட்டாயமாக 14 நாட்களுக்கு சுய தனிமை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பிரிட்டனில் இருந்து இந்திய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள், வருகையின்போதே விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆருக்கு உட்படுத்த வேண்டும். ஒருவேளை டிசம்பர் 21 முதல் 23ஆம் தேதிவரை அவர்கள் வந்திருந்தால், அவர்களுக்கு நடத்தப்பட்ட வைரஸ் பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்தால், அவர்கள் கட்டாய தனிமைக்காக, பிரத்யேக தனிமை முகாம்களில் வைக்க வேண்டும். அவர்களின் சளி, ரத்த மாதிரி ஆகியவை 24 மணி நேர இடைவெளியில் இருமுறை சேகரிக்கப்பட்டு, புணேயில் உள்ள வைராலஜி ஆய்வகத்துக்கு அவை அனுப்பி வைக்கப்படும்.

புதிய கொரோனா திரிபு பாதிப்பு அவருக்கு உள்ளதா என்பது கண்டறியப்படும்வரை அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களுடன் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்நிலையை 14 நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். வெறும் கொரோனா வைரஸாக இருந்தால் அதற்காக ஏற்கெனவே அமலில் உள்ள கொரானா வைரஸ் தனிமை கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தவர்கள் 14 நாட்களுக்கு வீட்டுத்தனிமைக்கு அனுப்பி வைக்கப்படலாம். அவர்களின் உடல்நிலையை மாநில சுகாதாரத்துறையினர் இரு வாரங்களுக்கு தினமும் கண்காணிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கையை, விமான நிலைய அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்து இந்திய விமான நிலையத்துக்கு வந்து நகரங்களுக்கு இடையே பயணிப்பவராக இருந்தால் அந்த பயணி மீது தனி கவனம்செலுத்தும் நடவடிக்கையில் இந்த அரசுத்துறைகள் உன்னிப்பாக செயல்பட வேண்டும்” என்றும் அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு டிசம்பர் 21 முதல் 23ஆம் தேதிவரை வந்த பயணிகள் அரசு ஒதுக்கிய தனிமை முகாம்கள் அல்லது வேறு தனிமை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைக்கு உட்படுத்தி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, அந்த வெளிநாட்டு பயணி டெல்லி விமான நிலையத்தில் இறங்கி பிறகு டெல்லியில் இருந்து வேறு நகரங்களுக்கு உள்நாட்டு விமான நிலையம் வழியாக சென்றிருந்தால் விமானம் ஏறும்போது அவருடன் இருந்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், விமானத்துக்குள் அவர் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து முன்னால் மூன்று வரிசை, பின்னால் மூன்று வரிசை என்ற வகையில் அவற்றில் அமர்ந்திருந்த பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு முதலில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும். முடிவு பாசிட்டிவ் என வந்தால் பிறகு அவர்களின் சளி மாதிரியை சேகரித்து புணே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணியை மாவட்ட சுகாதார அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இதேபோல, பிரிட்டனில் இருந்து கடந்த 28 நாட்களில் இந்தியாவுக்கு வந்தவர்களாக இருந்து, அவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அவர்கள் உடனடியாக அது பற்றிய தகவலை மாநில சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நெகட்டிவ் என வந்த பிறகு, மாநிலம் விட்டு வேறு மாநிலத்துக்கு செல்லக்கூடிய வெளிநாட்டு பயணி ஆக இருந்தால் அவர்கள் செல்லக்கூடிய மாநில சுகாதாரத்துறைக்கு அவரது நடமாட்டம் குறித்த தகவலை சம்பந்தப்பட்ட விமான நிலையத்தில் முகாமிட்டிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் புதிய திரிபு, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று இந்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போதைய கட்டுப்பாடுகள் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் எடுக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் இது வரையில் ஒரு கோடியே ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 778 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 756  பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.