உலகெங்கும் இருபது இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சியினர்

உலகெங்கும் இருபது இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முக்கியமான பெரு நிறுவனங்களில் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் ‘த அவுஸ்திரேலியன்’ செய்தித்தாளில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் சுமார் இருபது இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இரகசியமாகப் பணிபுரிந்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவ்களது பெயர்கள் மட்டுமின்றி, கட்சியில் அவர்களது பதவி, பிறந்த திகதி, தேசிய அடையாள எண் மற்றும் இனக்குழு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ள தகவல் திரட்டில் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

அந்த நிறுவனங்களின் பட்டியலில் தயாரிப்புத் துறையில் போயிங் மற்றும் வொக்ஸ்வேகன், மருந்துத் தயாரிப்பில் பிபைசர் மற்றும் அஸ்ட்ராசனேகா, நிறுவனங்களிலும், வங்கிகளில் ஏ.என்.இஸட் மற்றும் ஹெச்.எஸ்.பி.சி மற்றும் ஸ்டான்ட்டர்ட் சார்டட் ஆகிய இரு வங்கிகளில் மட்டும் 700இற்கும் மேற்பட்டவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலதிகமாக இத்தகைய மேற்கத்திய நிறுவனங்களில் 79,000 சீன கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகள் செயற்பட்டு வருவதும், இதன் உறுப்பினர்கள் அனைவரும் சீன அதிபரான ஜி சின்பிங்கிற்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அவுஸ்திரேலியப் பத்திரிகையாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அதிர்ச்சி தரும் தகவல் கசிவானது சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மற்றும் அதிபரான ஜி சின்பிங்  தலைமையில் அந்தக் கட்சி செயற்படும் விதம் குறித்து தெரியப்படுத்தியுள்ளது. அத்துடன் தங்கள் அறிவுசார் சொத்துக்கள் இப்படி பொருளாதார உளவின் மூலம் திருடப்படுவது குறித்து எதுவும் தெரியாமல் இருந்துள்ளது பெரு நிறுவனங்களுக்கும் அவமானகரமான ஒன்றாக அமைந்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஷங்காய் நகரத்தில் உள்ள அரசு தரப்பு கணிப்பொறி ஒன்றில் இருந்து சீன எதிர்ப்பாளர்களால் திருடப்பட்டட இந்தத் தகவல் திரட்டானது, மற்றொரு சர்வதேசக் குழுவின் மூலமாக தற்போது நான்கு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ள பன்னாட்டு ஊடகக் குழுமத்திற்குக் கிடைத்துள்ளது.