இந்திய உயர் ஸ்தானிகர் பதிலளிக்காத கேள்வி

ஒரு பிரிக்க முடியாத, வலுவான, பாதுகாப்பான ஜனநாயக பன்மைத்துவ இலங்கை என்பது இலங்கையின் நலனிற்கு அப்பால் இந்தியாவின் நலனுடன் தொடர்புபட்டது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். அதேவேளையில், இலங்கை 13 ஆவது திருத்தத்தை நீக்கினால் இந்தியா எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தொடர்ந்தும் 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்துமா? இலங்கையில் அரசியல் ரீதியில் மிகவும் உணர்பூர்வமான விடயம் குறித்து ஏன் இந்தியா தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகின்றது என்ற கேள்விக்கு அவர் வழங்கியுள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது;

“நீங்கள் நன்கு அறிந்துள்ளதை போல இந்த விடயம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது. நெருக்கமான அயல்நாடு என்ற அடிப்படையிலும், கடல்சார் சகா என்ற அடிப்படையிலும் ஒரு பிரிக்க முடியாத, வலுவான, பாதுகாப்பான ஜனநாயக பன்மைத்துவ இலங்கை என்பது இலங்கையின் நலனிற்கு அப்பால் இந்தியாவின் நலனுடன் தொடர்புபட்டது.

இலங்கையை வலுப்படுத்துவதை முக்கியமானதாக இந்தியா கருதுவதற்கான காரணத்தை இது வலுப்படுத்துகின்றது. இந்த பெரும்தேசத்தின் மக்கள் அனைவரும் தங்களின் நியாயபூர்வமான அபிலாசைகளின் அடிப்படையில் முன்னேறுவதை உறுதி செய்வதில் நாங்கள் எங்கள் பங்களிப்பை வழங்கத் தயராகவுள்ளோம்.

தமிழர்கள் உட்பட அனைவரினதும் அமைதி, சமாதானம், செழிப்பு ஆகியவை குறித்த அபிலாசைகளை இலங்கையால் அடைய முடியும். இந்த முயற்சிகளிற்கு வடக்குகிழக்கு அபிவிருத்தி திட்டங்களிற்கு உதவுவதன் மூலம் இந்தியா உதவி வருகின்றது. யுத்தத்தின் பின்னர் வடக்கு – கிழக்கில் தனது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த இந்தியா, தற்போது தென் பகுதிகளிலும் அதனை முன்னெடுக்கின்றது.

இதேவேளை இலங்கை 13ஆவது திருத்தத்தை நீக்கினால் இந்தியா எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.