இந்தியாவில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், டெல்லியை ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை போராடும் விவசாயிகள் முற்றுகை இட்டுள்ளதால், அங்கு கட்டணம் ஏதுமின்றி வாகனங்கள் கடந்து செல்வதைக் காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னணியிலேயே, ஹரியானா மாநிலம் குர்கான் எல்லையில் சுமார் 2,000 காவல் துறையினரும், ஃபரிதாபத் எல்லையில் சுமார் 3,500 காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சில விவசாய சங்கங்களின் தலைவர்கள், இந்திய அரசு புதிதாக இயற்றி உள்ள மூன்று சட்டங்களுக்கும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் என்று இந்திய அரசின் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய சட்டங்கள் மூலம் தங்களுக்கு எவ்வாறு பலன் கிடைக்கிறது என்பதையும் தம்மைச் சந்தித்த விவசாயிகள் தெரிவித்தனர் என்று நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.