விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை என விவசாயிகள் சங்க பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கொள்முதல் செய்யப்படும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், புதன்கிழமை 14ஆவது நாளை எட்டியிருக்கிறது.

இந்நிலையில், மத்திய அரசு 5 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடும் எட்டப்படவில்லை. செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட சில விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித்  ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து அகில இந்திய கிசான் சபா பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா,“மத்திய அரசு சார்பில் ஒரு திட்டம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக விவசாயிகள் சங்கங்கள் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்த பேச்சுவார்த்தை குறித்து தீர்மானிப்போம், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை என்றார்.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளன.

இந்த சந்திப்பின்போது விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாகவும் அவர்கள் மீதான மத்திய அரசின் அணுகுமுறை குறித்தும் எதிர்கட்சி தலைவர்கள், குடியரசு தலைவரிடம் முறையிடவிருப்பதாக அதன் கூறுகின்றனர்.

இதேவேளை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாகவும் அவர்களிடையே புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்கட்சிகள் செயல்படுவதாக இந்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.