திருமணத்திற்காக மதம் மாறினால் 10 ஆண்டு சிறை – அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா

திருமணத்தை பயன்படுத்தி ஒருவரை மதம் மாறச் செய்தால் பத்து வருடங்கள் சிறை தண்டனை வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

இந்து பெண்களை இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யும் போலி  திருமணங்களை தவிர்க்க பல சட்டங்களை நடமுறைபடுத்த இருப்பதாக பாஜக ஆளும் மாநிலங்கள் கடந்த சில வாரங்களாக அறிவித்து வருகின்றன.

இந்நிலையில்,  தர்ம் ஸ்வதந்திரய மசோதா 2020 மூலம் ஒருவரை கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி, ஏமாற்றி மதம் மாறச் செய்பவர்களுக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

மேலும் இந்த வரைவு மசோதா டிசம்பர் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவை முன் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டசபையின் முதல் அமர்வின் போது தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘லவ் ஜிகாத்’ எனும் வார்த்தையை எந்த சட்ட அமைப்பும் இதுவரை அங்கீகரித்தது இல்லை. இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை  காதலித்து திருமணம் செய்வதை லவ் ஜிகாத் என வலதுசாரி அமைப்புகள் குறிப்பிடுகின்றனர்.

பாஜக ஆளும் ஹரியானா, கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் லவ்-ஜிகாத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளன.