கொரோனாவில் இருந்து விடுபட  வேண்டுமா? பாரம்பரிய வாழ்க்கைமுறைக்கு திரும்புங்கள்

102
140 Views

இலங்கையில் கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்க வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் ‘இலக்கு’ மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலின் கருத்து வடிவம்.

கோவிட்-19 தொற்று தற்போது இலங்கை மக்களிடையே பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அதை எதிர்த்து அனைவரும் போராடவேண்டிய கட்டாயம் உள்ளது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டு வருவதுடன், இறப்புக்களும் தொடர்சியாக பதிவாகி வருகின்றன.

வடக்கு மாகாணத்தில் ஏனைய மாகாணங்களைப் போன்று சமூகத்தில் தொற்று இனங்காணப்படவில்லை என்றாலும், ஆபத்து உள்ள பகுதியாகவே நாம் பார்க்கிறோம். வெளி மாவட்ட மக்கள் வந்து செல்கிற இடமாக இருப்பதால், ஆபத்தை எதிர்கொள்வதற்கு எந்த நேரமும் நாம் தயாரக இருக்க வேண்டும்.

கோவிட்-19 ஆபத்து வடக்கில் நீங்கவில்லை 

மேல் மாகாணத்தில் இந்த கோவிட் தொற்று குறையும் வரைக்கும் எமக்கு ஆபத்து உள்ளது. எனவே சில கட்டாய நடைமுறைகளை நாம் எமது பிரதேச மக்களுக்கு அறிவித்துள்ளோம். அந்த வகையில்  திருமண நிகழ்வுக்கு 50 பேரும் மரணச் சடங்குகளுக்கு 25 பேர் வரையில் கலந்து கொள்ளலாம் என்றும், வேறு எந்த காரணத்துக்காகவும் பொது மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

ஆலய திருவிழாக்கள் அனுமதிக்கப்படாது.  கடவுளை வணங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் கூட்டம் கூடி வழிபாடுகள் செய்ய முடியாது. கலந்துரையாடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும், முக்கியமான  மக்கள் நலன் சார்ந்து முக்கியமானதும், அவசரமானதுமான  கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும். அதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் யாராக இருந்தாலும் குறிப்பாக சுகாதாரம்,  போக்குவரத்து துறைகளில் சம்பந்தம் இல்லாதவர்கள் கட்டாய தனிமைப்படுத்தில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளதுடன், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் போது செல்லும் இடங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

ஆபத்து குறையவில்லை. பெரும் ஆபத்தான கட்டத்தில் உள்ளோம். எனவே சுகாதாரத்துறையால் ஆபத்து குறைந்துள்ளதாக அறிவுக்கும் வரை நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.

பண்டிகைகளை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள்

இனிவரும் நாட்களில் தொடர்சியாக பல திருவிழாக்கள்,பண்டிகைகள் வரவுள்ளது. பொது மக்கள் மிக மிக அவதானமாக இருக்க வேணடும் நாட்டில் ஆபத்து நீங்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் வெளியில் சென்று பொருட்கள் வாங்குவது வழமை. இம்முறை அவற்றை தவிர்தல் வேண்டும். புத்தாடைகள் அணிவது முக்கியமில்லை. தூய்மையான ஆடைகளை அணிந்து தூய்மையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டில் இருந்து  பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுங்கள். ஆலயங்களுக்குத் தனித்தனியாக சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடித்து சென்று வாருங்கள்.

தவறான பழக்கவழக்கங்களிலிருந்து தமிழ் மக்கள் மாறவேண்டும்

தமிழ் மக்கள் பல தவறான உணவுப்பழக்க முறைகளுக்கு மாறி விட்டார்கள். அது ஆபத்தானது. மேற்கத்தேய உணவு முறைகளை கடைப்பிடிப்பதும், சத்துணவுகளை தவிர்க்கவும் பழகி விட்டார்கள். அதே போன்று பசும்பாலை தவிர்த்து, பால்மாக்களை பயன்படுத்துகிறர்கள். இதன் ஆபத்தை அறிந்து மக்கள் செயற்படவேண்டும்.

பெறுமதி மிக்க எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்துவிட்டு, தரமற்ற உடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய உணவுகளை விலை கொடுத்து வாங்கி உண்ணப் பழகி விட்டார்கள். இது நோயை அதிகரிக்குமே தவிர நோயிலிருந்து விடுபட முடியாது.

எமது மூத்தோரின் பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். விவசாயத்தில் அக்கறை காட்ட வேண்டும். வியர்வை சிந்துமளவுக்கு வேலைகளையோ, உடற்பயிற்சிகளையோ நாம் செய்ய வேண்டியது கட்டாயம். எமது மூத்தோர் இப்போதும் உடல் நலத்துடன் இருப்பதற்கு அவர்களின் பழக்கவழக்கங்களே காரணம். அதை நாம் மீண்டும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

தமிழர் பாரம்பரிய உணவு பழக்க முறையை கடைப்பிடியுங்கள்

கோவிட்-19 தொற்றை வராமல் தடுப்பதற்கோ, குணப்படுத்துவதற்கோ   எந்த உணவுப்பழக்க முறையும் இதுவரை இல்லை. ஆனால் குறித்த தொற்றில் இருந்து விரைவில் விடுபடுவதற்கு பல வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய உணவு பழக்க முறைகளுக்கு பொதுமக்கள் மாறவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான உணவுகளை நாம் உண்ண வேண்டும். எனவே பாரம்பரிய உணவு பழக்க முறையை கடைப்பிடித்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

வீட்டுத்தோட்டம் அமைப்பது அவசியம்

குறிப்பாக வடக்கில் இருந்து மிகவும் தரமான மரக்கறிவகைகள் அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கிருந்து அதி கூடிய விலைக்கு மரக்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. அதை எமது மக்களும் அதிக விலைக்கு பெற்றுக்கொள்கிறர்கள். ஆதில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இங்கு வீட்டுத்தோடம் அமைப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளது நஞ்சற்ற மரக்கறிகளை நாமே உருவாக்கி உண்பது சிறந்த முறை அந்த பழக்கத்தை உருவாக்குவதே எமது இருப்புக்கு சாத்தியமாகும்.

புதிய வாழ்க்கை முறையை நோக்கி செல்வோம்

தோற்று நோய் அபாயம் எப்போது நீங்கும் என நாம் கூற முடியாது. ஆனால் எமது உடல் உளத்தில் அக்கறை செலுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது.

குறிப்பாக தற்போது கோவிட் 19 தொடர்பாக  அதிக செய்திகளை படிக்காமல் எமது அன்றாட கடமைகளில் அக்கறை செலுத்த வேண்டும். தொலைக்காட்சிகளுக்குள் மூழ்காமல் மனநிலையை மாற்ற புத்தகங்களை படிக்க வேண்டும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடவேண்டும்.

வீட்டில் சுய தொழில் முயற்சியை ஆரம்பிக்கலாம். பாரம்பரிய விவசயாத்துக்கு மாற வேண்டும்.  இந்த தொற்றில் இருந்து விரைவில் குணமடைவதற்கு சில வழிகளை கூற முடியும்.

மதுப் பழக்கம், புகைத்தல் என்பவற்றை உடனடியாக நிறுத்த  வேண்டும். தொற்று நோயிலிருந்து எம்மை பாதுகாப்பதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டும். அதன் மூலமே தொற்று நோயிலிருந்து விரைவில் விடுபட முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here