ட்ரம்பின் செயற்பாட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து -பைடன் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் சந்திக்கும் அச்சுறுத்தல்கள், உளவுத்துறையின் அறிக்கைகள், பாதுகாப்பு  சம்பந்தப்பட்ட விஷயங்களை ட்ரம்ப் நிர்வாகம், புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனிடம்   தர மறுப்பதாக  Transition Team குழு குற்றம் சுமத்தியுள்ளது.

‘அதிபர் மாற்றம்’ (presidential transition) என்பது தற்போதைய அதிபரிடமிருந்து புதிய அதிபராக பதவியேற்க உள்ளவரிடம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைப்பதாகும்.

இந்த அதிபர் மாற்றத்தை விரைந்து நடத்துமாறு தேசிய பாதுகாப்பு குழுவில் பணிகளில்  இருந்த முன்னாள் அதிகாரிகள் 150 பேர் அமெரிக்க அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் இதில் ஏற்படும் தாமதம் நாட்டின் பாதுகாப்புக்கே பேராபத்தாகிவிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பைடனின் “மாற்றம் செய்யும் குழுவின் வழிகாட்டி ஜென் சாகி, “அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருப்பவருக்கும், அவருடைய தேசிய பாதுகாப்பு குழுவிற்கும் உளவுத்துறையின் அறிக்கைகள், அதிபருக்கு தற்போதைய சூழலில் இருக்கும் நிகழ் நேர அச்சுறுத்தல்கள், வான்வெளி அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை ட்ரம்பின் நிர்வாகம் தரவில்லை” என  குற்றம்சுமத்தியுள்ளார்.