கொரோனா தொற்றால் அரசியல் கைதிகளுக்கு ஆபத்து

இலங்கைச் சிறைச்சாலைகளில் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றுக் காரணமாக இதுவரையில் 300க்கும் மேற்பட்ட கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்று உறுதி செய்யப்பட்ட கைதிகள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷாரா உப்புல்தெனிய   கூறியுள்ளார்.

காலி பூஸா, வெலிக்கடை,  போகம்பர, குருவிற்ற சிறைச்சாலைகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள ஓர் இறைச்சி சந்தையில் தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் பரவல், கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளையும் பாதித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பால் ‘பெருந்தொற்று’ என அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் உலகளவில் 53,397,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 1,303,629 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில்,இலங்கையில் அதிகம் வீரியம் கொண்ட கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தினால் எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 583ஆக அதிகரித்துள்ளது.  அதே நேரம் 52க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக கொரோனா தொற்றுக் காரணமாகச் சிறைகளில் உள்ள கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவுவதால், விளக்கமறியல் உள்ள சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கான அறிவுறுத்தல்களைச் சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியிருந்தார்.

இதையடுத்து கொரோனா ஆபத்து நிலையை கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதற்கு  நடவடிக்கைகளை எடுக்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நேரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கும் கொரோனா வைரஸால்  ஆபத்து ஏற்பட்டிருப் பதாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையற்று விடுதலை செய்ய  வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

ஆனாலும் இது வரையில் கைதிகளை விடுவிக்கவோ, அல்லது பிணையில் செல்ல அனுமதிக்கவோ அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்காத நிலையில், சிறைச்சாலைகளில்  கொரோனா தொற்று உறுதிப்படுத்தும் கைதிகளின் எண்ணிக்கை 300 கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.