பொம்பியோ தொடுத்த தாக்குதல்சீனாவின் பக்கத்திலா இலங்கை? – அகிலன்

கொழும்பு அரசியல் கடந்த வாரம் இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் நிறைந்த ஒரு வாரமாகவே இருந்துள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் கொழும்பு வருகை, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்கே சம்பந்தனுடன் நடத்திய பேச்சு, சீனாவின் புதிய தூதுவர் இலங்கை வருகை என இராஜதந்திர அரசியல் சூடுபிடித்திருந்தது.

20 ஆவது திருத்தத்தின் மூலம் அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி தன்வசம் எடுத்திருக்கும் பின்னணியில், இந்த அரசியல் நகர்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிந்திருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை இந்த விஜயம் மீண்டுமொருமுறை தெளிவாக உணர்த்தி இருக்கின்றது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளரும் தெளிவான சில செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கின்றார்.

பொம்பியோவின் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கடுமையான அறிக்கை ஒன்றை சீனா வெளியிட்டிருந்தது. “இலங்கை மக்களை பொம்பியோ குழப்பக் கூடாது”  என்ற அர்த்தத்தில் சீனாவின் அந்த அறிவிப்பு ஒரு எச்சரிக்கைப் பாணியில் வெளிவந்திருந்தது. பொம்பியோ தன்னுடைய விஜயத்தின் போது இலங்கை மக்களைக் குழப்பக்கூடிய வகையில் சீனா குறித்து கருத்து வெளியிடுவார் என்பதை சீனா சரியாகவே கணித்திருந்தது. பொம்பியோவின் கொழும்பு வருகை இலங்கையில் தன்னுடைய இருப்பை எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் சீனா மிகவும் அவதானமாகவே இருந்திருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவையும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் கூட்டாக ஊடக மாநாட்டை நடத்திய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், சீனா மீது தாக்குதலைத் தொடுப்பதற்கு அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். “இலங்கையை, சீனா சூறையாடுகின்றது” என்ற அர்த்தத்திலான அவரது கருத்து நிச்சயமாக இராஜதந்திர வட்டாரங்களை அதிர வைத்திருக்கின்றது. இது சீனாவுக்குக் கடும் அதிருப்தியையும் – சீற்றத்தையும் கொடுத்தது.

gota mike.600 பொம்பியோ தொடுத்த தாக்குதல்சீனாவின் பக்கத்திலா இலங்கை? - அகிலன்

“நாங்கள் நண்பர்களாக வருகின்றோம், சகாக்களாக வருகின்றோம். ஆனால் சீனாவோ, இலங்கையின் இறையாண்மையை மோசமாக மீறும் வகையில் மோசமான உடன்படிக்கைகளையும், சட்ட மீறல்களையும் கொண்டு வந்திருக்கின்றது. இலங்கையின் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி பிறரை சூறையாடும் தன்மை கொண்டது” என பொம்பியோ கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சீனா மீதான தாக்குதலை நடத்தினார்.

இலங்கையில் வைத்து, இலங்கைக்குப் பெருமளவு பொருளாதார கட்டுமான உதவிகளைச் செய்து வரும் சீனா மீது இவ்வாறான தாக்குதல் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நடத்துவார் என்பது எதிர்பார்க்காத ஒன்றுதான். இலங்கை அரசுக்கு இது பெரும் சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இதன் மூலம் சொல்லப்பட்ட செய்தி முக்கியமானது.

சீனாவோ இவ்வாறான தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்திருந்தது போல, சில நொடிகளிலேயே அதற்குக் கடுமையான பதிலடி ஒன்றைக் கொடுத்தது. கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட ருவிட்டர் குறிப்பில், “மன்னிக்கவும். இராஜாங்க அமைச்சர் பொம்பியோ. நாம் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் பிஸியாக இருக்கின்றோம். உங்களது ஏலியன் எதிர் பிறிடேட்டர் விளையாட்டுக்கான அழைப்பில் எமக்கு அக்கறையில்லை.  என்றும் போல அமெரிக்கா இரட்டைப் பாத்திரத்தை ஒரே நேரத்திலேயே விளையாட முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவகையில் நையாண்டித் தனமான ஒரு குறிப்பைத்தான் சீனா தனது பிரதிபலிப்பாக வெளியிட்டது.

பொம்பியோவுடன் இணைந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, தாம் வெளிவிவகாரங்களில் நடுநிலைக் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இலங்கை வழமையாக அவ்வாறுதான் கூறுகின்றது.

“விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் முடிவின் பின்னர் சீனா இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியது” என்பதை பொம்பியோவுடனான பேச்சின் போது, சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் காரணமாக இலங்கை சீனாவின் கடன்பொறியில் சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். “இலங்கைக்கும், வெளி நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல விடயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன கலாச்சார மற்றும் வரலாற்றுக் காரணிகள், அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆகியனவே சில முன்னுரிமைக்குரிய விடயங்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, வெளிநாட்டு உறவுகளை பேணுவதற்காக எந்த சூழ்நிலை உருவானாலும் இலங்கையின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீனா தொடர்பில் பொம்பியோ அதிரடியாகத் தெரிவித்த கருத்துக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலாகவே ஜனாதிபதியினதும், வெளிவிவகார அமைச்சரினதும் கருத்துக்கள் உள்ளன. அமெரிக்காவை இந்தக் கருத்துக்கள் திருப்திப்படுத்தும் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல. சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதை தம்மால் ஏற்க முடியாது என்பதை இலங்கை மண்ணில் வைத்தே அமெரிக்கா இந்தளவுக்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம்  வெளிப்படுத்தியிருப்பது இலங்கைக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கைதான்.

இலங்கையுடன் இரண்டு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. ஒன்று SOFA மற்றது எம்.சி.சி. இந்த இரண்டு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப்பண்ணுவதற்கான அழுத்தத்தைத்தான் அமெரிக்கா கொடுத்தது என ஜே.வி.பி. போன்ற அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், “அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட இலங்கை கைச்சாத்திடாது” என ஜனாதிபதி கோட்டாபய சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு உறுதியாகக் கூறியிருக்கின்றார்.

இலங்கையைப் பொறுத்தவரையில், சீனாவின் முதலீடுகள் அதற்கு முக்கியம். பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதால், சீனாவின் கடன் உதவிகளும் அதற்குத் தேவை. பலமான பொருளாதாரத்தைக் கொண்டதாக சீனா இருப்பதால், அதற்கான வாய்ப்புக்களும் அதற்கு அதிகம். இலங்கை என்னதான் அணிசேராக் கொள்கை என்று சொல்லிக் கொண்டாலும், சீனாவுடனான உறவு அதற்கு முக்கியம். அதனால், அந்த உறவை இலங்கை தொடரத்தான் போகின்றது.

இந்தியாவின் ஆதரவுடன் சீனாவுக்கு எதிரான வார்த்தைப் போரை கொழும்பில் ஆரம்பித்த அமெரிக்கா, இலங்கையைப் பணிய வைப்பதற்கு வைத்திருக்கும் உபாயங்கள் என்ன? இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறப்போகும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அதனை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்!