இலங்கையை முடக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் -GMOA

இலங்கையை முடக்காமல் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்த வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஆரம்பத்தில் நாட்டின் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

ஆனால், இன்று நாட்டின் அனைத்து மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையானது நாடு எவ்வளவு ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது என்பது எமக்குத் தெரிகின்றது.

ஒக்டோபர் மாதம் முதலாவதாக கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா தொற்று தற்போது பல்வேறு காரணங்களினால் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவி இருக்கின்றது. அத்துடன் 356 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 56 பிரிவுகளில் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போது 120 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எம் மத்தியில் சில குறைபாடுகள் காணப்படுவதன் காரணமாகவே தொற்று இவ்வாறு பரவலடைந்துள்ளது.

நாம் இந்த விடயத்தில் கூடிய அவதானம் செலுத்தாவிட்டால் மேலும் இருவார காலப்பகுதியில் முழு நாட்டிலும் கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

அதனால் நாம் இந்த நேரத்தில் முழு நாட்டையும் முடக்காமல் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்தநிலை மேலும் மோசமடையும் சந்தர்ப்பத்தில் முழு நாட்டையும் முடக்கும் நிலை ஏற்படும். ஆகையினால் நாட்டை முழுமையாக முடக்காது தொற்றைக் கட்டுப்படுத்தும் காரணிகள் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும்”  என்றார்.