சட்டவிரோத குடியேறிகளுக்கு ‘நவராத்திரி’ உணவா?: உணவகங்களுக்கு மிரட்டல்?

நவராத்திரியை முன்னிட்டு தில்லி நகரில் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளுக்கு உணவுகளை வழங்கியதற்காக மூன்று உணவகங்கள் மிரட்டப்பட்டுள்ளன.
ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு உணவு வழங்கிய செய்தி ஏ.என்.ஐ. ஊடகத்தின் டீவிட்டர் பக்கத்தில் வெளியாகியதும், உணவக உரிமையாளர்களை மிரட்டும் வெறுப்பு பிரச்சாரம் சமூக ஊடகங்களில் நடந்தாகக் கூறுகிறார் சிவம் சேகல் எனும் உரிமையாளர்.
“உணவகத்தின் தொலைப்பேசி வாயிலாக எனக்கு வந்த அழைப்புகளில், சட்டவிரோத குடியேறிகளுக்கு உணவளித்தது ஏன் என்றார்கள். ஒவ்வொருவருக்கும் விளக்க முயற்சித்தேன். அதற்கிடையில், Zomato-வில் எங்களது உணவகத்தை மோசமாக மதிப்பிடத் தொடங்கிவிட்டனர்,” என்கிறார் சேகல்.
இந்நிலையில், இந்தோனேசிய கடலில் ரோஹிங்கியா அகதிகள், தரையிறங்க உதவக்கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு ஏசெஹ் பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் படகு ஒன்று தென்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் அப்படகைக் கரைக்கு அழைத்து வரும் செயலில் ஈடுபடக்கூடாது என ஏசெஹ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இப்படகில் நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது குறித்த எந்தவித விரிவான தகவலும் இல்லை. முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏசெஹ் கடல் பகுதியில் தத்தளித்த அகதிகள் படகு மீன்வர்கள் மீட்கப்பட்டிருந்தது.
மியன்மாரில் ரோஹிங்கியா இனத்தவருக்கு எதிராக வன்முறைகளை அடுத்து, அம்மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி, வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போதும் அம்மக்கள் அகதிகளாக அடைக்கலம் தேடி ஒவ்வொரு நாடாக அலைந்துகொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.