விடுதலையை நோக்கிய பயணம் – ஒரு புதிய பார்வை

எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தேறிய இரண்டாம் உலகப்போரின் முடிவும் அதனைத் தொடர்ந்து ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் நிலைகொண்டிருந்த ஐரோப்பியக் காலனியக் கட்டமைப்புகள் படிப்படியாக செயலிழக்கச் செய்யப்பட்ட நிகழ்வும், தெற்காசியா உள்ளிட்ட பிரித்தானிய ஆட்சியின்கீழ் அதுவரை இருந்த பல புதிய சுதந்திர ‘நாடிய அரசுகள்’ (nation – states) தோற்றம் பெற வழிவகுத்தன.

அதைவிட அண்மையில், எண்பதுகளின் இறுதியில், ஏற்பட்ட சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் காரணமாக மீண்டும் உலக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல புதிய நாடுகள் உருவாக்கம் பெற்றன. இவற்றின் விளைவாக, 1945ஆம் ஆண்டு வெறும் 51 நாடுகளாக இருந்த ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை இன்று 195 ஆக விரிவடைந்தது.

இவ்வாறாக புதிதாக உருவாகிய நாடுகள் பலவற்றின் சுதந்திரத்தை நோக்கிய பயணம் இலகுவாக இருக்கவில்லை. அமைதியான போராட்டங்களினூடாகவும் சில வேளைகளில் ஆயுதப் போராட்டங்களினூடாகவும், மிக கடுமையான துன்பங்களுக்குப் பின்னரும் ஒப்பிட முடியாத ஈகங்களுக்குப் பின்னருமே இந்த நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தலைப்பட்டனர். இன்றோ, நாடுகளின் தன்-நிர்ணய உரிமை தற்காலப் பன்னாட்டுச் சட்டத்தில் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு விடயமாகவே மாறிவிட்டது.

இருப்பினும், வரலாறு இப்படியிருக்க, சுதந்திரத்துக்கான அல்லது பிரிந்து செல்வதற்கான நியாயமான பல போராட்டங்கள், பன்னாட்டுச் சமூகத்தின் அங்கீகாரத்தையோ அல்லது ஆதரவையோ இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். நாம் வாழுகின்ற இக்காலத்தைப் பொறுத்தவரையில், சுதந்திரமடைவதன் தேவையை நிலைநிறுத்தி ஒரு புதிய நாட்டை உருவாக்குவதற்கு பல தடைக்கற்களைக் கடக்க வேண்டியிருக்கிறது.

எந்த ‘நாடிய அரசுகளிடமிருந்து’ சுதந்திரம் கோரப்படுகின்றதோ, அந்த அரசுகள் அப்படிப்பட்ட ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே இங்குள்ள முக்கியமான தடைக்கல் என்பது மிகத் தெளிவாகத் தெரியும் ஒரு விடயமாகும். இந்த நாடிய அரசுகளில் இருக்கின்ற பெரும்பான்மையான இனத்துவ அல்லது பண்பாட்டுக் குழுக்கள் ஒரு நிலப்பகுதியை விட்டுக் கொடுப்பதையோ அல்லது தன்னாட்சியை வழங்குவதையோ துரோகச் செயலாக பார்ப்பதன் காரணத்தினால், இப்பிரச்சினைகள் எந்தவித தீர்வுமின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாடு என்ற எண்ணக்கரு எப்படி ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டுடன் நெருக்கமாகப் பிணைந்திருக்கிறது என்பதைக் கருத்திலெடுப்பதும், இங்கு முக்கியமானதாகும். இவ்விடயத்தை பின்னர் பார்க்கலாம்.

இரண்டாவதாக, மிகப் பெரிய அணு ஆயுத வல்லமையைக் கொண்ட நாடுகள் பலவற்றை தன்னகத்தே உள்ளடக்கிய பன்னாட்டுச் சமூகம், தத்தம் நாடுகள் தங்கள் சொந்த, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி, தாம் விரும்பும் பொழுது மட்டுமே நாடுகளுக்குள்ளிருக்கும் பல்வேறு குழுக்களின் தன்-நிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்க முன்வருகின்றன. உதாரணமாக, கொசோவோவையும், தெற்கு சூடானையும் எடுத்துக் கொண்டால், இந்த இரு நாடுகளும் மேலைநாட்டு அதிகார சக்திகளின் ஆதரவுடன் விடுதலையை வென்றெடுத்திருக்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சலுகை, புவிசார் அரசியலை மையப்படுத்திய விடயங்களை மட்டும் காரணங்காட்டி, பாலஸ்தீனம், காஷ்மீர். தமிழீழம் போன்ற, நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்ற விடுதலைப் போராட்டங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்பது அவதானிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

தற்காலத்தில் நடைபெற்று வருகின்ற ‘நாடிய’ சுதந்திரப் போராட்டங்கள் தொடர்பாக பன்னாட்டுச் சமூகம் கடைப்பிடிக்கின்ற அலட்சிய மனப்பான்மைக்கு பொதுவாகக் கவனத்திற் கொள்ளப்படாத இன்னொரு மூன்றாவது காரணமும் உண்டு. தொடர்ந்து உலகமயமாகிக் கொண்டிருக்கும் தற்கால உலகில், பணம், தகவல் மற்றும் தொழில்நுட்பம் என்பவை விரைவாக ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதன் காரணத்தினால், நாடுகளுக்கு இடையே இருக்கின்ற எல்லைகளுக்கான வரையறைகள் மறைய, புதிய சுதந்திர நாடுகளை உருவாக்குவதற்கான ஆர்வம் உலகளவில் அதிகமாக இல்லாமற் போய்விடுகிறது.

இன்று, பெருநிறுவன முதலீட்டாளர்களைப் பொறுத்தவரையில், நாடுகளோ, பண்பாடுகளோ, ஏன் அங்கு வாழும் மக்கள்கூட இவர்களுக்கு முக்கியமல்ல. அவர்களுக்கு முக்கியமானவை பல்வேறு விதமான ‘சந்தைகள்’ மட்டுமே. பல விதங்களில் வேறுபட்டிருக்கும் இச்சந்தைகள் அனைத்தும் பொது விதிமுறைகளாலும் பொதுவான ஆட்சிப் பொறிமுறைகளாலும் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு குடையின்கீழ் கொண்டுவரப்படுவதையே இப் பெருநிறுவனங்கள் விரும்புகின்றன. மனித உரிமைகள் பற்றியோ சனநாயகம் பற்றியோ இப் பெருநிறுவனங்கள் அலட்டிக் கொள்வதில்லை. தமது வணிக செயற்பாடுகளை எவ்வளவுக்கு இலகுவாக மேற்கொள்ள முடியும் என்பதே; அதாவது எவ்வளவு அதிக இலாபத்தை எவ்வளவு குறுகிய நேரத்தில் ஈட்ட முடியும் என்ற ஒரே ஒரு விடயம் மட்டுமே இப்பெருநிறுவனங்களினது முக்கிய நோக்கமாகும்.

அதுமட்டுமன்றி உலகின் பல பகுதிகளிலும் இப் பெருநிறுவனங்கள் பொருண்மிய பலத்திலும், அரசியல் செல்வாக்கிலும் உலகின் நாடுகள் பலவற்றுக்குச் சமமாகவும் சில வேளைகளில் அவற்றைவிட மேலும் பலமான நிலையிலும் இருப்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஓர் உதாரணத்தைப் பார்த்தோமென்றால், மடிக்கணினிகள் (Laptops), திறன்மிகுபேசிகள் (iphones) போன்றவற்றை உற்பத்தி செய்யும் அப்பிள் நிறுவனம் (Apple Inc.)  உலகிலேயே முதன் முதலாக ஒரு டிரில்லியன் (trillion) அமெரிக்க டொலர்களை சந்தை மூலதனமாகக் (market capitalization)  கொண்ட ஒரு பெருநிறுவனம் என்ற நிலையை எட்டியது. தொடர்ந்து, 2019 டிசம்பரில், அதன் மதிப்பு 1.3 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது. இந்த மதிப்புயர்வை சரியாகப் புரிந்து கொள்வதாயின், உலகிலேயே 14 நாடுகள் மட்டுமே அப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தைவிடப் பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) கொண்டிருக்கின்றன. இது அவுஸ்திரேலியாவின், ஸ்பெயின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான 1.4 டிரில்லியன் டொலர்களைவிடச் சற்றுக்குறைவானதாகும்.

‘நாடிய’ சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஒரு வெற்றிகரமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதற்கு இந்த புவிசார் மூலதனத்தின் ஆற்றல் தொடர்பான உண்மையைக் கருத்தில் கொள்வது அவசியமானதாகும். நாடிய விடுதலை அமைப்புகள் ஆகக்குறைந்தது தங்களது இலக்கை அடைவதற்கு, பெருநிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதையும், அவை செலுத்தும் ஆதிக்கத்தின் இரகசியங்கள் எவை என்பதையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்.

தாம் விரும்பும் இலக்கை அடைய வேண்டுமென்றால், தற்போது இருப்பதைவிட ஆக்கபூர்வமாகவும், அதிக செயற்றிறன்மிக்க முறையிலும் செயற்படுவதற்கு, இந்த விடுதலை அமைப்புகள், இப்பெருநிறுவனங்கள் எவ்வாறாக மேலாண்மை (management) செய்கின்றன என்பதைத் தெளிவாகக் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். ஒரு நாட்டை ஒழுங்கமைக்கும் செயற்பாட்டைக் கவனத்தில் எடுத்தோமானால், தற்போது, குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தையும், தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டே முடிவுகளை மேற்கொள்ளுகின்ற நடைமுறைகள் மேலாண்மை செய்யப்படும். இக்காலகட்டத்தில், அப்படிப்பட்ட செயற்பாடுகள் இந்தப் பெருநிறுவனங்கள் கொண்டிருக்கின்ற அதி நவீனமயப்படுத்தப்பட்ட பொறிமுறைகள் வழியாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்னும் உண்மை தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இங்கு கற்றுக்கொள்ளப்பட வேண்டிய இன்னொரு பாடம் என்னவென்றால், நிலம், நிலப்பகுதி போன்றவை முன்னர் வகித்த பங்கு, இன்று பொருண்மிய வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற நிதி, தொழில்நுட்பம், மனித வளங்கள் போன்ற வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும் மூலதனத்தால் ஈடுசெய்யப்பட்டிருக்கின்றது என்பதாகும். இன்றைய உலகில் பெருநிறுவனங்களாக விளங்குகின்ற நிறுவனங்களைப் பார்க்கும் போது, இவற்றில் எதுவுமே மனைகளை வாங்கி-விற்கும் நிறுவனங்கள் அல்ல (real estate). மாறாக, மென்பொருட்களை (softwares) உருவாக்கி, மிகவும் செயற்றிறன்மிக்க வகையில் பொருட்களையும், சேவைகளையும் வழங்குகின்ற அமசோன் (Amazon), கூகிள் (Google), அப்பிள் (Apple), முகநூல் (Facebook) போன்ற பெருநிறுவனங்களாகும்.

சாத்தியமிக்க ஒரு புதிய நாட்டை உருவாக்கும் பயணத்தில், நிலப்பகுதியை மீட்டெடுப்பது என்பது ஒரு புதிய நாட்டை அமைக்கின்ற செயற்பாட்டில் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பதுதான் இதன் பொருளாகும். அதிக நிலப்பரப்பைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காத போதிலும், ஆசியாவிலே அதியுயர் தனிநபர் வருமானத்தைக் (per capita in come) கொண்டிருக்கும், நிலப்பரப்பில் மிகவும் சிறிய நாடாகிய சிங்கப்பூர், இந்த உண்மையை மிக நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின்றி ஒரு நாடு இருக்க முடியுமா? நிச்சயமாக இல்லை. ஒரு மக்கள் கூட்டம் எங்கோ ஓரிடத்தில், ஓர் உறுதியான நிலப்பரப்பில் தமது வாழ்வை நிலைநிறுத்தி வாழ்வது அடிப்படையானதாகும். ஒரு குறிப்பிட்ட, வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியைத் தமக்கெனச் சொந்தமாகக் கொண்டிருப்பது ‘நாடு’ என்ற எண்ணக்கருவின் மிக அடிப்படையான விடயமாகும். ஆனால் இங்கு மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம் என்னவென்றால், தனியே நிலத்தையும், நிலப்பகுதியையும் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் மட்டும் எமது முழு ஆற்றலையும் வலுவையும் செலவிடுவது இன்றைய உலக ஒழுங்கைப் பொறுத்த வரையில், விடுதலையை வென்றெடுப்பதற்கு ஏற்ற வழிவகையாக அமையாது. நிலப்பகுதியுடன் இணைந்து, இன்னும் பல காரணிகள் இருக்கின்றன என்பது இனங்கண்டு கொள்ளப்பட வேண்டும்.

பெருநிறுவனங்களின் உலகளாவிய ஆற்றல் என்பது, நாடுகளின் எல்லைகளை ஊடறுத்து, அவை இயங்கிக் கொண்டிருக்க காரணமான, உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றிலொன்று ‘தங்கியிருக்கும் நிலையை’ தோற்றுவிப்பதாகும். அவ்வாறாகப் பார்க்கும் போது, எல்லாவற்றையும்விடப் பெரிய ‘வல்லரசு’ கூட இன்று உண்மையில் சுதந்திரமாக இல்லை என்பதே எதார்த்தமாகும். பழைய ‘நாடிய அரசுகள்’ (nation-states) என்ற ஒழுங்கமைப்பில் இயங்குகின்ற நாடுகள் விரைவில் அழிந்துவிடப் போவதில்லை என்பது உண்மை தான். ஆனால் இந்த நாடுகளின் இறைமையும், தீர்மானம் எடுப்பதில் இருக்கின்ற தன்னாட்சித் தன்மையும் மிகவும் வலுவிழந்த நிலையிலேயே இன்று காணப்படுகின்றன.

இதன் பொருள் என்னவென்றால், ஏற்கனவே இருக்கின்ற ஒரு ‘நாடிய அரசு’ என்ற கட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்ல ஒருவர் விரும்புகின்ற போது, அப்படிப் பிரிந்த பின்னர் அவர்கள் அடுத்து புவியியல் ரீதியாக, எவர் எவருடன், எப்படிபட்ட கட்டமைப்பில் இணைந்து கொள்ளப் போகின்றனர் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகின்றது. உலகிலுள்ள விடுதலை அமைப்புகள், தாம் எவரிடமிருந்து பிரிந்து செல்ல வேண்டுமென்ற விடயத்தில் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. ஆனால் அப்படி பிரிந்த பிறகு, தாம் எவருடன் இணைந்து பயணிக்க விரும்புகின்றனர் என்ற விடயம் தொடர்பாக அவர்கள் மிக ஆழமாகவே சிந்திக்க வேண்டியிருக்கிறது.

உதாரணமாக, தெற்காசியாவின் சூழலமைவை எடுத்துக் கொண்டால், நீங்கள் ஒரு சுதந்திர தமிழீழத்தைக் கோருகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்படியென்றால், எதிர்காலத்தில் உங்கள் இருப்புக்கான உத்தரவாதத்தை எவர் வழங்குவர்? – அது அமெரிக்க ஒன்றியமா, இந்திய ஒன்றியமா, சீனாவா? என்ற ஒரு வினா தேவையற்ற ஒன்றாகத் தென்படலாம். ஆனால் இங்குள்ள கசப்பான உண்மை என்னவென்றால், புவியியல் ரீதியிலான செயற்பாடுகளில் உங்களை ஆதரிக்கும் வலுவான ஒருவரைச் சார்ந்திருப்பது அடிப்படையானதாகும்.

மிகத் தெளிவாகவே தெரிகின்ற காரணங்களினால் ‘நாட்டு ஒன்றியம்’ உருவாக்குவதை இங்கு நான் உள்வாங்கவில்லை. இன்று அது வல்லரசுகளால் ஆட்டிப்படைக்கப்படுகின்ற ‘பல் பிடுங்கப்பட்ட’ ஓர் அமைப்பாகவே இருக்கிறது. இங்கு நாங்கள் ஒன்றைக் கட்டாயம் நினைவிற் கொள்ள வேண்டும். நாம் உடன் பயணிப்பதற்கு தனியே நாடுகளை மட்டும் இனங்கண்டால் போதாது. இப்பயணத்தில் உலகளாவிய பெருநிறுவனங்களையும் இணைப்பது தவிர்க்க முடியாததாகும்.

தற்போதைய உலக ஒழுங்கமைப்பு இப்படித்தான் இருக்கிறதென்றால், எமக்கு முன்னே இருக்கும் தெரிவுகள் எவை? பெரும் சிக்கல் நிறைந்த இவ்வாறான புவியியல் எதார்த்தங்கள் வழியாக எமது விடுதலைக்கான பாதையை நாம் எப்படி செதுக்கிக் கொள்ளலாம்?

இதில் முதலாவதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், நிலப்பகுதியை மையமாகக் கொண்டு, புதிய நாடுகளை உருவாக்குவது என்பது தற்போது முன்பைவிட கடினமானதொன்றாக மாறியிருக்கும் அதே வேளையில், புதிய வடிவங்களில், நவீனமயப்படுத்தப்பட்ட நாடுகளை அமைக்கும் சாத்தியப்பாடுகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இப்படிப்பட்ட புதிய தெரிவுகளில் கவனத்தைச் செலுத்துவதற்கு, நாடிய விடுதலை அமைப்புகள் நிலப்பகுதியை மீட்பதில் மட்டும் தமது முழுக்கவனத்தையும் மையப்படுத்துவதை தவிர்த்து, நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இக்காலத்தில் மூன்று மிக முக்கிய மூலதன வடிவங்களாக விளங்குகின்ற நிதி, தொழில்நுட்பம், மனித வளங்கள் போன்றவற்றை கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

மனித ஆற்றல்களும் வளங்களும் எல்லாவற்றிலும் முக்கியத்துவம் வகிக்கின்ற காரணிகளாகும். அதிக நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துவதனால் மட்டுமே நாடுகள் விடுதலை பெறுவதில்லை. மாறாக விடுதலை பெறுவதற்கான துணிவையும் ஆற்றலையும் கொண்ட மக்கள் பெருமளவில் இருக்கிறார்கள் என்பதே விடுதலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். இதன் பொருள் என்னவென்றால், நாடிய விடுதலை இயக்கங்கள் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் மிகப்பெரிய வளமான தங்களது மக்கள் எங்கு இருந்தாலும், அவர்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

மக்களது ஆற்றல்கள், வளங்கள், தாகங்கள் போன்றவற்றிற்குப் பொருத்தமான வடிகால்கள் அமைக்கப்பட்டு, ஒரு நாட்டின் அடிப்படையான அமைப்புக்களாக விளங்குகின்ற மக்களாட்சிப் பொறிமுறைகள், வங்கி போன்ற நிதி நிறுவனங்கள், கல்வியை மேம்படுத்தும் நிறுவனங்கள், சுகாதாரச் சேவைகள், மனிதாபிமானப் பணியை முன்னெடுக்கும் அமைப்புக்கள், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் கட்டமைப்புகள் போன்ற வெவ்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

முக்கிய செயற்பாடுகள் அனைத்துமே மெய்நிகர் (virtually) வடிவில் முன்னெடுக்கப்படும் இன்றைய காலப்பகுதியில், உலகளாவிய அளவில் இயங்கக்கூடிய ஒரு தமிழீழப் பல்கலைக்கழகத்தையோ, தமிழீழ வங்கியையோ ஏன் தொடங்கக் கூடாது? புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ்ச் சமூகத்தில் வாழும் மருத்துவர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் போன்ற பல்வேறு துறைசார்ந்த நிபுணர்களை ஒருங்கிணைத்து, புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ்ச் சமூகங்கள் நடுவிலும், அவரவர் வாழும் நாடுகளிலும் வாழ்கின்ற மக்களுக்கும் பணிபுரியக் கூடிய செயலணிகளை ஏன் உருவாக்கக் கூடாது? விளையாட்டுத்துறையில் பன்னாட்டு நிகழ்வுகளில் தமிழீழ அணிகள் ஏன் பங்குபெறக் கூடாது?

இங்கு மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், எங்கேயோ ஒரு நிலப்பகுதியை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால் மட்டும் நாடுகள் தானாக உருவாக மாட்டாது. அதற்கு மாறாக, அந்த நாட்டின் பங்காளிகளாக விளங்குகின்ற மக்களுக்கான, நலன் சார்ந்ததும், அவர்களது எதிர்காலம் சார்ந்ததுமான உற்பத்திகளையும், செயற்பாடுகளைகளையும் வடிவமைக்கின்ற பொழுதுதான் அந்த நோக்கம் நிறைவேறுகிறது. இதற்காக உங்களது நிலப்பிரதேசத்துக்கான உரிமையை கோருவதை நீங்கள் நிறுத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படியான நிலப்பகுதியை நீங்கள் உரிமையாக்கிக் கொள்வதற்கான காலத்துக்காக காத்திருக்கும் அதே வேளையில், ஒரு நாட்டை உருவாக்குகின்ற ஏனைய பல செயற்பாடுகளை நாம் முன்னெடுத்துச் செல்லலாம்.

அப்படிப்பட்ட ஆற்றலையும் வலுவையும் கட்டியெழுப்பும் செயற்பாடு இன்றே தொடங்கப்பட வேண்டும். ஏனென்றால், எவ்வளவு விரைவாக ஒரு நாடு என்ற உணர்வுடன் நாம் செயற்படுகிறோமோ, அவை ‘மெய்நிகர் செயற்பாடுகளாக’ இருந்தால்கூட, அவ்வளவு விரைவாக அந்த நாடு உருவாகும்.

திருமிகு சத்யா சிவராமன்

(சத்யா சிவராமன், டெல்லியை தளமாக கொண்டு இயங்கும் ஓர் ஊடகவியலாளர் என்பதுடன் ஒரு பொது சுகாதார ஆர்வலரும் ஆவார்.)

தமிழில் – ஜெயந்திரன்-