சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர் சுட்டுக் கொலை

இலங்கையின் பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், பொலிஸ் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று  நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஷிக என்றழைக்கப்படும் மாகந்துர மதுஷ், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவலில் இருந்த நிலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

மாகந்துர மதுஷ், மாத்தறை – கம்புறுபிட்டிய பகுதியில் மாகந்துர மதுஷ் 1979ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சாதாரண கல்வி தகைமைகளை கொண்ட நிலையில், அவர் ஆரம்ப காலத்தில் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பின் 2002ஆம் ஆண்டு அரச அதிகாரியொருவரை கொலை செய்ததன் ஊடாக அவர், நிழலுலக செயற்பாடுகளுக்குள் பிரவேசித்துள்ளார். கொழும்பு புறநகர் பகுதியான பேலியகொட பகுதியில் வைத்து 2005ஆம் ஆண்டு மாகந்துர மதுஷ், முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்தவாறே தமது நிழலுலக குழு உறுப்பினர்களின் உதவியுடன் மற்றுமொரு கொலையை 2006ஆம் ஜுன் மாதம் 11ஆம் திகதி செய்துள்ளார்.

இவ்வாறு கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாகந்துர மதுஷ், பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்று, பல நாடுகளில் தலைமறைவாக இருந்து, இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தும் பிரதான போதைப்பொருள் வர்த்தகராக இருந்தார்.

இந்த நிலையில், சர்வதேச போலீஸாரின் உதவியுடன் மாகந்துர மதுஷ் 2019ஆம் ஆண்டு பெப்ரவர் மாதம் 4ஆம் திகதி துபாயில் வைத்து கைது செய்யப்படுகின்றார்.

அதன்பின்னர், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, அதே ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி மதுஷ், நாடு கடத்தப்பட்டு, இலங்கையில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஒன்றரை வருட காலமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலிருந்து மாகந்துர மதுஷை, கடந்த 16ஆம் திகதி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு தமது பொறுப்பிற்கு எடுத்தது.

இந்தநிலையில், மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருளை காண்பிப்பதாக தெரிவித்து மாகந்துர மதுஷ், போலீஸ் அதிகாரிகளை மாளிகாவத்தை பகுதிக்கு அழைத்து சென்ற நிலையிலேயே, இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு, மாகந்துர மதுஷ் கொல்லப்பட்டுள்ளார்.