முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது

வீட்டிற்கான இழப்பீட்டு தொகை ரூ.67.90 கோடி வழங்கியதை தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெ., வசித்த ‘வேதா இல்லம்’ உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்த வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என தீர்மானிப்பட்டது. ஜெ., வாரிசுதாரர்களான அவரது அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக் ஆகியோர் ஜெ., இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை சார்பில் ஜெ., செலுத்த வேண்டிய வரி பாக்கி 36.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டை கையகப்படுத்துவதற்காக, வீட்டிற்கான இழப்பீட்டு தொகையான 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் அரசு செலுத்த வேண்டும் என, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு.

இதனை தொடர்ந்து தமிழக அரசு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்று கொள்ளலாம். நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதல்வர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை. நினைவு இல்ல முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியதாவது: வேதா நிலையத்தை அரசுடைமையாக்க விட மாட்டேன். மீண்டும் சட்டப்போராட்டம் தொடரும். அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வேன். அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் எடுத்து கொண்டோமா? அல்லது வழக்கு தொடர்ந்தோமா? ஜெயலலிதா மரணம் எதிர்பாராதது. இல்லாவிடில் உயில் எழுதியிருப்பார். ஜெயலலிதா வீட்டை கோயிலாக நினைக்கலாம் ஆனால், கோயிலாக மாற்ற முடியாது. இது முடிவல்ல ஆரம்பம் தான். வேதா நிலையத்தை விட்டுத்தர வேண்டும் என நினைத்தது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக.,வின் வைகை செல்வன் கூறுகையில், ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசுடைமையாக்காவிட்டால், வரலாறு எங்களை மன்னிக்காது. வரலாற்றை மாற்றி எழுதவும் கூடாது. திருத்தவும் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது: வேதா நிலையம் ஒன்றும் பரிசாக வந்தது என தீபா நினைக்க வேண்டாம். ஜெயலலிதாவின் வீட்டை அரசுடைமையாக்கியது மகிழ்ச்சியான அறிவிப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.