இந்தியாவில் காவல் துறையினர் மீது துப்பாக்கி சூடு:8 காவலர்கள் பலி

இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் குற்றப்பின்னணி உடைய நபரைக் கைது செய்ய முயன்றபோது எட்டு காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை விகாஷ் துபே எனும் நபரை கைது செய்ய முயன்றபோது இது நடந்துள்ளது.

60 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றப்பின்னணி உடைய நபர் ஒருவரை கைது செய்யும் முயற்சியின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் உள்பட எட்டு காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.

பல காவல் துறையினரும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

மோதல் நடந்த இடத்தில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அந்த கிராமத்தையே சுற்றி வளைத்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். விகாஸ் துபே உடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் செல்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

“சாபேபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திக்ரு எனும் கிராமத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய மோசமான குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் சென்றார்கள். ஜேசிபி எந்திரத்தை நிறுத்தி அவர்கள் தடுக்கப்பட்டனர்.

கட்டடங்களின் கூரை மீது இருந்த குற்றவாளிகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள்,” என்று உத்தரப்பிரதேச மாநில காவல் துறை இயக்குநர் ஹிதேஷ் சந்திர அவஸ்தி தெரிவித்துள்ளார்.

“அப்போது காவல்துறையினர் பலியாகினர். துணை காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மூன்று உதவி ஆய்வாளர்களும் நான்கு காவலர்களும் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.”