2500 ஆண்டுகளுக்கு முந்தையதொழில் நகரம், கொடுமணல்

தமிழ்நாடு,ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கில் 15 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான பகுதி கொடுமணல் எனும் சிற்றூர். இங்கு 1985,86,89,90,97, 2018 போன்ற ஆண்டுகளில் அகழாய்வு நடைபெற்றது. அப்பொழுது கிடைக்கப் பெற்ற பொருள்களை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்திய பொழுது, அவை கி.மு.500 காலகட்டத்திற்கு – அதாவது 2500 ஆண்டுகளுக்கு – முற்பட்டவை எனக் கண்டறியப் பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில் இது” கொடுமணம் ” என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பாடல்கள், செப்பேடுகள், பட்டயங்கள் ஆகியவற்றிலும் கொடுமணல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 50 ஹெக்டேர் பரப்பளவில் நகரமும், 10 ஹெக்டேர் பரப்பில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன.
கொடுமணல் பகுதியை 1961 ஆம் ஆண்டில் கல்வெட்டு ஆய்வாளர் புலவர் இராசு மற்றும் செல்வி முத்தையா ஆகியோர் முதன் முதலாகக் கண்டறிந்து இதன் சிறப்பை அறிக்கையாக வெளியிட்டனர். அதன் பிறகு ஒன்றியத் தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவை இங்கு அகழாய்வை மேற்கொண்டன. இப்பொழுது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு நடந்து வருகிறது. மைய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே இதற்கு நிதி ஏதும் வழங்குவதில்லை என்பது கருதத்தக்கது.
வாழ்விடம் மற்றும் ஈமக்காடு என இரு பகுதிகளாகக் கொடுமணல் பகுதி பிரிந்து காணப்படுகிறது. முதுமக்கள் தாழிகள் இங்கே உள்ளன. தீய்ந்து போன கம்பு, வரகு, சோளம் ஆகியவை கண்டறியப் பட்டுள்ளதன் மூலம் முன்பு வேளாண்மைசெழித்து வளர்ந்திருந்ததை உணர முடிகிறது.
அரிவாள், சுத்தி, உளி, கடப்பாறை, வில், குத்தீட்டி, கோடரி, அம்புநுனி, தட்டு, குவளை போன்ற பொருள்கள் இங்கு நடந்த அகழாய்வில் கிடைத்துள்ளன. இதன் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில் நுட்பத்தைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பது உறுதியாகிறது.
கொடுமணல் அணிகலன்களுக்குப் புகழ் பெற்ற பகுதியாக இருந்துள்ளது. இங்கு பெரிய பச்சைக் கல் (பெரில்) நீலக்கல் ( சபையர்) சூதுபவளம் ( கார்னீலியன் மணிகள் ) பளிங்கு போன்ற அரிய கற்களலான கலைநுட்பம் மிகுந்த ஆபரணங்கள், அணிகலன்கள் கிடைத்து உள்ளன. கண்ணாடி வளையல்கள், சங்கினாலும். எலும்புகளாலும் செய்யப்பட்ட பொருள்களும் கண்டறியப் பட்டுள்ளன.
தங்கம், வெள்ளி, மரகதம், வைடூரியம் போன்ற விலையுயர்ந்த பல பொருள்களும், கறுப்பு மற்றும் கறுப்பும் சிவப்பும் கலந்த மண்கலன்கள், பானைகள் போன்ற பொருள்களும் இங்கு காணப்படுகின்றன.
கொடுமணலில் உற்பத்தி செய்யப்பட்ட அணிகலன்கள், சேரர்களின் முசிறி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அக்காலத்தில் கொடுமணல், நகை தயாரிப்பு மையமாக விளங்கியுள்ளது. செய்நேர்த்தி மிக்க இந்த நகைகளை வாங்க வடநாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பலர் இங்கு வந்துள்ளனர்.
இந்தப் பகுதியிலுள்ள ரோமானியக் காசுகள், உரோமப் பேரரசில் புழங்கிய பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள், கொடுமணலுக்கும் வெளிநாடுகளுக்கும் அந்தக்காலத்திலேயே தொடர்புகள் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. தவிரவும் இவற்றில் குவிரன் ஆதன், கண்ணன் ஆதன், ‘
அந்தவன் ஆதன், வன்மூலன், பண்ணன் ஆகிய பெயர்கள் உள்ளன. ஆதன் எனும் பெயர் சேர மரபினரோடு தொடர்பு உடையது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பரவலான எழுத்தறிவு மிக்க சமூகமாகத் தமிழ்ச்சமூகம் விளங்கியதை அறிந்து கொள்ள முடிகிறது.
இப்பொழுது ( 2020 ) இங்கு நடைபெற்று வரும் அகழாய்வில், பழங்கால ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பேசிய மொழியின் எழுத்துப் பொறிக்கப்பட்ட மண் பொருள்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இசுலாமிய நாடுகளுடனும் தமிழகத்துக்கு வணிகத் தொடர்பு இருந்தது வந்தது தெரிய வந்துள்ளது.
இதே போல், நகைகளுக்குப் பொருத்தப்படும் வண்ணக் கற்களை விற்கவும், கொடுமணலில் பட்டை தீட்டப் பட்ட ஆபரணக்கற்களை வாங்கவும் ஆப்கானிஸ்தான் நாட்டு வணிகர்கள் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருள்கள் கிடைக்கும் இவ்விடம்
பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்கப் பட வேண்டும்.
ஆனால், அவ்வாறு பாதுகாக்கப் படாததால் இப்பகுதி விவசாய நிலங்களாகவே உள்ளது.மேலும் இங்கு கிடைக்கப் பெற்ற பொருள்களை இதே இடத்தில் ஓர் அருங்காட்சியகம் அமைத்துப் பேண வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே ஈரோட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.