அன்புக்குரியவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் பொழுதுகள் விடிகின்றன- நிலவன்.

சிறிலங்கா பௌத்த சிங்கள அரச  படைகளும், சர்வதேச நாடுகளும் 2006-2009 காலப் பகுதிகளில் வன்னியில்  இனப்படுகொலைப் போரை நடத்தினார்கள்.  தீவிரமான இனப்படுகொலைப் போரின் விளைவாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த 330,000 க்கும் அதிகமான மக்கள் மிகவும் குறுகிய கடலோரப் பகுதியில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட பிரதேசம். மாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரை நீண்டு கொண்டிருக்கும் இந்த கடலோரப் பகுதி  மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாக இருக்கின்ற பகுதி .இதனை இலங்கை அரசு போர் தவிர்ப்பு ,பாதுகாப்பு வலயம் என அறிவித்திருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை  என பாதுகாப்பு வலயப் பகுதிகளை குறிவைத்து  சிறிலங்கா படையினர் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளையும், கிளஸ்டர் குண்டுகளையும் கனரகத் தாக்குதலை நடத்தியதோடு, நச்சு வாயுத் தாக்குதல் மற்றும் பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதல் போன்ற அகோர எறிகணைத் தாக்குதல்களை  மருத்துவமனை, பாதுகாப்பு வலயப் பகுதிகளில் அதிகமாக நடாத்தியிருந்தார்கள்.

இடப்பெயர்வையும் படுகொலைகளையும் நித்தம் எதிர்கொண்டு    வன்னியில் வாழும் மக்களின் உளவியல் மற்றும் உளவியல் ரீதியான தாக்கத்தை மதிப்பிடுவதும்  போர்க்காலச் சூழலில் வெளிப்படுத்துவதும் மிகவும் சவாலான பணியாகும். பாரிய இராணுவ நடவடிக்கைகளும் தொடர்ச்சியான விமான, பல்குழல் கொத்துக் குண்டுகளின் தாக்குதல்களால் இறுதிப்பகுதியில்  பல குடும்பங்கள் ஒன்று அல்லது ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்புகள், தவிர்க்கமுடியாதவை.

மனித வாழ்வின் அன்புக்குரியவர்களின்  இழப்பும் இறந்த தம் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை புதைக்கக்கூட முடியாத நிலையில் இறந்த உடலங்களை வீதியிலேயே விட்டுவிட்டு கனத்த மனதுடன் நகர்ந்து போன நிலையும்; நாங்கள் பட்ட துன்பங்களையும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களாய் எம்முள் பலருக்கு அன்பார்ந்த ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை. வடக்கு கிழக்கு மக்களிடத்தில் அன்புக்குரிய ஒருவரை இழந்த அனுபவம் இருக்கும் என்று நம்புகின்றேன்.

யுத்தத்தில் ஒரு தாய் தன் மகனை மகளை  இழப்பதாலும், ஒரு மனைவி கணவன் தம் துனையினைப்  பறிகொடுப்பதனாலும் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் ஏற்படும் ஓர் அகால மரணம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது என்றால் மிகையில்லை. அந்தமரணம் நடந்த இடம் காலம் சூழல் ஒருநிழல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதே இல்லை.2 அன்புக்குரியவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் பொழுதுகள் விடிகின்றன- நிலவன்.

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகவும்  1980ம் ஆண்டிற்கு பின்னர்  திருமுறுகண்டி பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற 52 வயது நிறைந்த  முத்துத்தம்பி நாகேஸ்வரன்;  2009ம் ஆண்டு  இடப்பெயர்வின் போது சொத்துக்களை உடைமைகளை விட்டு தப்பிப் பிழைத்து முறுகண்டியில் வட்டக்கச்சி, விசுவமடு, தருமபுரம் போன்ற பகுதிகளூடாக படிப்படியாக இடம்பெயர்ந்ததை நினைவு கூர்ந்தார். கொத்துக் கொத்தாக ஒவ்வொரு எறிகணையிலும் சிதையுண்டு போன மரண அழுகுரல்கள், வீதியோரம் எறிகணைகள் விழுகின்ற சத்தங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரது அலறல்சத்தம் மக்களும் வாகனக் கூட்டங்கள் பிரதான வீதி எங்கும் நெரிசல். எனவே நெரிசல் குறைவாக இருந்த குறுக்கு வீதியொன்றின் ஊடாக  பயணிக்க தீர்மானித்தோம். அந்த குறுக்கு வீதியே மகனுக்கு ஜமனாக வந்தது.

பிரதான வீதியில் நேராக ஒரு 40 மீற்றர் வரை முன்னால் சென்ற என் மூத்த மகனை அழைத்து இந்த குறுக்கு வீதியூடாக செல்வோம் எனக் கூறினேன் நிமிடங்களில் ஏவப்பட்ட எறிகணைகளில் ஒன்று துவிச்சக்கர வண்டியோடு அப்படியே நின்று என் மகன் முன்னேயே விழுந்து அவன் உடல் சிதைந்து என் செல்ல மகனின் உடல் செயல் இழந்து போய் விட்டதே என்பதை ஏற்றுக் கொள்ளவும் மனம் மறுத்தது. முக்கியமான ஏதோ ஒரு பொருளைத் தொலைத்துவிட்டபோது ஏற்படும் படபடப்பு இருக்கிறதே, அது போன்ற ஒரு பதற்றம் என் நெஞ்சில்  மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில் எங்கள் கண்முன் துடிதுடித்து  உயிர் துறந்தான்.

எங்களால் அந்தக் காட்சியை ஜீரணிக்கவே முடியவில்லை பிரதான வீதியோரம் சென்றிருந்தால் அவனின்  மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்ற உணர்வும் மனதை உறுத்துகிறது. ‘நான் அவனைப் மீளக் கூப்பிட்டிருக்க கூடாது என்று மனைவி புலம்பி ரோட்டில் விழுந்து கதறி அழுதார் என்னாலும் பிள்ளைகளாலும் தாங்க முடியவில்லை. என் அன்பு மகனை காப்பாற்ற முடியவில்லை என்னுயிரே போனது போல இருந்தது.மனைவியையும் மற்ற பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னுடையது  எனவே என்னை சுதாரித்துக் கொண்டேன்.

எறிகணைகள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டே இருந்தன. நீண்ட நேரத்துக்கு பிறகு மனைவியை ஆறுதல் கூறி துணியொன்றை போட்டு புதைத்து விட்டு அங்கிருந்து புறப்படலானோம். பத்து மாதம் சுமந்த பெற்ற அன்னையால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை. எல்லா உறவுகளுக்கும் இதே நிலை என்பதை தெளிவுபடுத்தி அழுகையோடு ஒரு மாதிரியாக இரவு மாத்தளனை சென்றடைந்தோம். ‘ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அவளைத் தேடுவேன். மகன்  இல்லை என்று உணரக் கொஞ்சநேரம் ஆகும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் ஏப்ரல் மாதம் மாத்தளனில் படையினரின சுற்றிவளைப்பு அகோரத் தாக்குதல்களினால் பதுங்குகுழிகளில் இருந்து வெளியேற முடியாது அவதிப்பட்டோம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை. உணவுப்பொருட்களும் இல்லாத நிலையில்மக்களாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் பிரவேசித்தோம்.

தவிர்க்க முடியாத சூழல் வேறு வழியில்லை நரியோட்டக்கடல் வழியாக கழுத்தளவு தண்ணீரில் நடந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டை அடைந்தோம். அவ்வாறு செல்கையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூடுகளில் ஏராளமான மக்கள் தண்ணீருக்குள் தாரைதாரையாக விழுந்து இறந்து கொண்டிருந்தார்கள். ஒருவிதமான பயம் என்றாலும் ஒன்றுமே செய்யமுடியாத நிலை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் பிரவேசித்ததும்.

எறிகணையால் மூத்த மகனைப் பறித்து மீளாத எமக்கு அடுத்த இடியும் காத்திருந்தது. இராணுவத்தினர் விசாரனை என  இளையமகனை ஆக்கிரோசமாக எங்கள் கண்முன்னேயே தாக்கினார்கள். எங்களது மகனைப் போன்ற தமிழ் இளைஞர்கள் ஒருதொகுதியினர் அந்த பகுதியில் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். எங்கள் இதயம் ஸ்தம்பித்து குருதியை கண்கள் கக்கிக் கொண்டிருந்தன. (ஜயோ என கதறி அழத் தொடங்கிவிட்டார்…) பின்னர் அங்கு அமர்த்தப்பட்டிருந்த மக்களுக்கு முன்னிலையில் அவர்களை சிறிய விசாரனையின் பின்னர் விடுவதாகக் கூறி  ஒரு பெரிய இராணுவ வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள். கதறி அழுத மக்களை துப்பாக்கியை காட்டி கத்தி  கதறினால் சுடுவோம் என்ற தொனியில் சிங்களத்தில் சொல்லவும் நாம் அவர்களின் கால்களைப் பிடித்து கதறி அழுதோம்.3 1 அன்புக்குரியவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் பொழுதுகள் விடிகின்றன- நிலவன்.

பல்வேறு சோதனைகள் கெடுபிடிகளுக்குப் பிறகு அங்கிருந்து அருணாச்சலம் இடைத்தங்கல்  முகாமிற்கு கொண்டுவரப்பட்டோம்  முகாமில் இருக்கும் காலத்தில் நாங்கள் முறையிடாத இடங்களே இல்லை இரண்டு ஆண்பிள்ளைகளும் இல்லாத நிலையை எங்களால் தாங்க முடியவில்லை. அவர்களை வளர்ப்பதற்கு நாங்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்போம் என்பதை அறியாதவர்கள் இலகுவாகப் பறித்துவிட்டார்கள். காணாமல் போன எங்கள் இளைய மகனின் தேசிய அடையாள அட்டை போன்ற அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருக்கின்றோம். சில வேளைகளில் தாயார் மகனின் படங்களைப் பார்த்து இன்றும் அழுது புலம்புவது தொடர்கிறது என்றார்.

யுத்தத்தின் பின் இடம்பெற்ற வாகன விபத்தில் தனது ஒரு கையையும் மனைவியின் ஒரு காலும் செயல் இழந்த நிலையில் இயலாமையால் தவிக்கும் இந்த தந்தை முறுகண்டி ஆலயம் அருகே சிறிய கச்சான் கடையொன்றை நடாத்துவதன் மூலம் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை  மேற் கொள்கின்றார் பட்ட காலிலே படும் என்பது போல தனது மனைவிக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

சிறிலங்கா இராணுவத்தின் கொடுமைகளின் விளைவாக கடந்த பதினொரு ஆண்டுகளாக இரவில்  படுக்கைக்காகச் செல்கின்ற போது அன்புக்குரியவர்கள் திரும்பி வருவார்கள்  ஏன்ற நம்பிக்கை காணப்படுகிறது இப்படித்தான் ஒவ்வொரு நாளும் எங்களில் பலருக்கு ஆரம்பமாகிறது. தனது மூத்த மகன் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட இளைய மகன் இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அந்த வலிகளோடு வாழும் இந்த தந்தையின் மனக் குமுறல் போல் ஆயிரக் கணக்கானவர்கள் இன்னும் உளநலம் குன்றி, பிடிப்பற்ற வாழ்வில் நடைப் பிணங்களாக நாட்களை எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

நிலவன் / நிக்சன் பாலா,

உளவளத்துணை,

மற்றும் உளச்சமூகப்பணியாளர்.