கிடைக்க வேண்டியது கருணை அல்ல. நீதி.

பதின் பருவத்தின் கடைசியில் இருந்த தனது ஒரே மகனை 30 வருடங்களுக்கு முன்பு இது போல ஒரு நாளில்தான் ’விசாரணைக்குதானே’ என்று நம்பி அற்புதம் அம்மாள் அனுப்பி வைத்தார். இப்போது வரை பேரறிவாளன் வீடு திரும்பவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் எழுவர் தம் வாழ்க்கையை பலிகொடுத்து இன்றோடு 30 வருடங்கள்.
30 நிமிடங்கள் கூட மின்சாரம் இல்லாமல் வாழ பொறுமை இல்லாத நாம்தான் 30 வருடங்கள் சிறை கம்பிகளின் இருளுக்குள் ஏதோவொரு நம்பிக்கையை பிடித்தபடி, காலத்தை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள் அப்படியே சாக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
அவர்களின் நம்பிக்கையின் பின்னாலிருப்பது உண்மை என்னும் ஒளி மட்டுமே. அதை மட்டுமே ஏந்தி தமது இளமை, வாழ்க்கை எல்லாவற்றையும் பலியிட்டு காத்துக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன். 19 வயது பையனாக இரண்டு 9 வால்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்ததுதான் அவர் செய்த குற்றம்.
சிறையின் இருள் அவரை விழுங்க பேறிவாளன் அனுமதிக்கவில்லை என்பதுதான் ஒரே ஆறுதல்.
சிறையில் பலரது நன்மதிப்பையும் அவர் பெற்றிருக்கிறார். சிறையை கல்விக்கூடமாக மாற்றி தானும் பயின்று மற்றவரையும் பயிற்றுவித்திருக்கிறார். சிறையில் இருந்தபடியே தான் நிரபராதி என்று நிரூபித்திருக்கிறார். ஆம் அவர் நிரபராதி என்பதை நீண்ட சட்ட போராட்டதிற்கு பிறகு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரியின் வாயிலாகவே நிரூபித்திருக்கிறார்.
செய்யாத தவறுக்காக தண்டனையை அனுபவித்து கொண்டிருக்கும் பேறிவாளனுக்கு சமூகம் இனியும் என்ன நியாயத்தை செய்து விட முடியும்? அவரது விடுதலை, சமூகம் தனக்குதானே செய்துக் கொள்ளும் சிறு நியாயமாக இருக்கும்.
இனியும் அவருக்கு கிடைக்க வேண்டியது கருணை அல்ல. நீதி.