வேட்பு மனுக்களை 12.30 வரையே ஒப்படைக்கமுடியும்.

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் இறுதி தினம் இன்றாகும். இன்று (19) நண்பகல் 12.30 மணி வரையில் இந்த பணிகள் இடம்பெறும்.

நேற்று (18) காலை வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணி ஆரம்பமானது. முக்கிய அரசியல் கட்சிகளைப் போன்று சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை கையளிப்பதில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் தற்பொழுது அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி பிரதீப் ஜயரத்ன தெரிவித்தார்.

சுயேட்சைக்குழுக்கள் 3 வேட்பு மனுக்களை ஒப்படைத்துள்ளன. 22 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார். காலி, மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், யாழில் அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக நேற்று பகல் வரை 7 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து அரசியல் கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.