கொரோன தடுப்பு மருந்து தயாரித்த ஜெர்மனிய நிறுவனம்; கையகப்படுத்த அமெரிக்கா முயற்சி-ஜெர்மனி குற்றச்சாட்டு

136
160 Views

ஜெர்மனியை சேர்ந்த கியூர்வேக் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக முதல் மருந்தை உருவாக்கி உள்ளது. ஜூலை முதல், இந்த மருந்தை பயன்பாட்டிற்கு விடுவதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது. .

ஜெர்மனியின் முன்னணி மருந்து ஆராய்ச்சி நிறுவனமான கியூர்வேக் என்னும் நிறுவனம் தான் கொரோனாவிற்கு எதிரான மருந்தை உருவாக்கி உள்ளது. இந்நிறுவனமானது தற்போது இந்த மருந்தை சோதனை செய்து வருகின்றது. வரும் ஜூலை முதல் இந்த மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மருந்து நிறுவனத்தை கையகப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகின்றார். ஜெர்மனி நிறுவனத்திடம் இருந்து மருந்தை கொள்முதல் செய்வதற்கும், மொத்தமாக நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கும் அதிபரின் நிர்வாகம் முயன்று வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தையை அதிபர் டிரம்ப் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நிறுவனத்தை வாங்க முயற்சிக்கும் அதிபர் டிரம்ப், இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டுள்ளதாக ஜெர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொரோனா மருந்து தயாரிப்பு நிறுவனத்தை வாங்கினால் மருந்து அமெரிக்கா வசம் வரும், அவ்வாறு வரும்பட்சத்தில் வேறு நாடுகளுக்கு மருந்தை விற்பனை செய்யாமல் அமெரிக்காவிற்கு மட்டுமே மருந்தை பயன்படுத்துவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கியூர்வேக் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையின்போது அதிபர் டிரம்ப் இதனை குறிப்பிட்டதாக ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான மருந்தை உருவாக்குவதற்கான செலவு அதிகம், அதே நேரத்தில் குறைந்த அளவு மருந்தை உருவாக்குவதற்கு பல நாட்கள் ஆகும் என்பதால் தான் அமெரிக்கா மருந்தை வாங்கும், ஆனால் யாருக்கும் விற்காது என பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவிற்கு எதிரான மருந்துக்கு மட்டும் 10 பில்லியன் டாலர்(ரூ.74,110கோடி) மற்றும் மொத்த நிறுவனத்தை வாங்குவதற்கு 25 பில்லியன் டாலர் (ரூ.1,85,275 கோடி) தருவதாகவும் அதிபர் டிரம்ப் அரசு விலை பேசியுள்ளது. நிறுவனத்தை விலை பேசியதற்கான ஆதாரங்கள் ஜெர்மன் நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தங்கள் நாட்டில் இருக்கும் கியூர்வேக் நிறுவனத்தை அமெரிக்காவிற்கு விட்டுகொடுப்பதற்கு ஜெர்மனி தயாராக இல்லை. எனவே அதுவும் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக விலை பேசி வருகின்றது.

உலக நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருந்தை வாங்குவதில் ஜெர்மனி, அமெரிக்கா இடையே கார்ப்பரேட் சண்டை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here